லாரியில் இருந்து கொட்டிய சகதி மண் சைதையில் போக்குவரத்து பாதிப்பு
லாரியில் இருந்து கொட்டிய சகதி மண் சைதையில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 08, 2026 06:51 PM
சென்னை: லாரியில் இருந்து கொட்டிய சகதி மண்ணால், சைதாப்பேட்டையில் நேற்று காலை இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தேனாம்பேட்டையில் உள்ள ஒரு பழைய கட்டடத்தில் இருந்து, சகதி மண் ஏற்றிய லாரி, நேற்று காலை 7:30 மணி, கிண்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.
நந்தனம் பகுதியில் வந்தபோது, லாரியின் பின்பக்க கதவு கழன்று விழுந்தது. இதனால், சாலையில் 100 மீட்டர் நீளத்திற்கு சகதி மண் கொட்டியது.
சாலையில் கொட்டிய ஈரமான சகதி மண், வாகனங்களின் டயர்களை வழுக்கச் செய்யும் வகையில் இருந்தது. குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலைமை ஏற்பட்டது.
மேலும், அப்பகுதியில் மேம்பால பணி நடைபெறுவதுடன், ‘பீக் ஹவர்ஸ்’ வேளை என்பதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனடியாக, தனியார் துப்புரவு நிறுவனமான ‘உர்பேசர் சுமித்’ நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த 20க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், சாலையில் சிதறி கிடந்த 12 டன் சகதி மண்ணை அகற்றினர். இதையடுத்து இரண்டு மணி நேரத்திற்குபின், காலை 10:00 மணிக்குப்பின் போக்குவரத்து சீரானது. சைதாப்பேட்டை போக்குவரத்து போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
