/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போக்குவரத்து போலீசார் அலட்சியம் ஜி.என்.டி., சாலையில் கடும் நெரிசல்
/
போக்குவரத்து போலீசார் அலட்சியம் ஜி.என்.டி., சாலையில் கடும் நெரிசல்
போக்குவரத்து போலீசார் அலட்சியம் ஜி.என்.டி., சாலையில் கடும் நெரிசல்
போக்குவரத்து போலீசார் அலட்சியம் ஜி.என்.டி., சாலையில் கடும் நெரிசல்
ADDED : அக் 14, 2024 03:22 AM

செங்குன்றம்:வெளிவட்ட சாலை வாகனங்களுக்கு வலை விரித்து, 'வருவாய்' ஈட்டும் செங்குன்றம் போக்குவரத்து போலீசார், ஜி.என்.டி., சாலை போக்குவரத்து நெரிசலை சீரமைக்காமல் அலட்சியம் காட்டுவதால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.
செங்குன்றம் ஜி.என்.டி., சாலை, சென்னை - ஆந்திராவை இணைக்கும் முக்கிய சாலை.
மேலும் செங்குன்றம் நெல் சந்தைக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் ஆகியவற்றில் இருந்து தினமும், 100க்கும் மேற்பட்ட லாரிகளில் நெல் வரத்து உள்ளது.
இந்நிலையில், நெல் மார்க்கெட் முதல், திருவள்ளூர் கூட்டுச்சாலை வரை, 150க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளால், போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாக உள்ளது.
அதனால் கடந்த ஜூலை மாதம், மாநில நெடுஞ்சாலைத்துறையினரால், செங்குன்றம் போலீசார் பாதுகாப்புடன் சாலை ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றபட்டன.
ஆனால், மீண்டும் ஆக்கிரமிப்புகள் வழக்கம் போல் அதிகரித்து விட்டன. அதனால், செங்குன்றம் ஜி.என்.டி., சாலையில், குறிப்பாக நெல் மார்க்கெட் முதல் திருவள்ளூர் கூட்டுச்சாலை வரை, போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாகிவிட்டது.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பாதசாரிகள், சாலையை கடப்போர், பேருந்து பயணியர் என அனைத்து தரப்பினரும், நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாக வேண்டியுள்ளது.
குறிப்பிட்ட 1 கி.மீ., துாரத்தை வாகனத்தில் கடக்க, அதிகபட்சம் 20 நிமிடம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. பலர் விபத்திலும் சிக்குகின்றனர்.
பிரச்னையை சீரமைக்க வேண்டிய போக்குவரத்து போலீசார், இந்த சாலையை கண்டுகொள்வதில்லை.
அவர்கள், வண்டலுார் - -மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வாகனங்களை மடக்கி வழக்கு, அபராதம் என்ற பெயரில்,'கல்லா' கட்டுவதில் மட்டுமே தீவிரம் காட்டி வருகின்றனர்.
எனவே, கொஞ்சம் பொதுமக்கள் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.