/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரயில் ரத்து - டேக் லைன் - 'ஷாப்பிங்' புறப்பட்ட குடும்பத்தினர் நெரிசலில் விழிபிதுங்கி பரிதவிப்பு
/
ரயில் ரத்து - டேக் லைன் - 'ஷாப்பிங்' புறப்பட்ட குடும்பத்தினர் நெரிசலில் விழிபிதுங்கி பரிதவிப்பு
ரயில் ரத்து - டேக் லைன் - 'ஷாப்பிங்' புறப்பட்ட குடும்பத்தினர் நெரிசலில் விழிபிதுங்கி பரிதவிப்பு
ரயில் ரத்து - டேக் லைன் - 'ஷாப்பிங்' புறப்பட்ட குடும்பத்தினர் நெரிசலில் விழிபிதுங்கி பரிதவிப்பு
ADDED : அக் 28, 2024 01:45 AM

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், வார விடுமுறை நாளான நேற்று, புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க, குடும்பத்தினர் பலர், தாம்பரம், குரோம்பேட்டை, தி.நகர், சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் குவிந்தனர்.
இந்நிலையில், கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு தடத்தில் பராமரிப்பு பணிக்காக நேற்று அதிகாலை 4:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, மின்சார ரயில் ரத்து செய்யப்பட்டது.
இதனால், முக்கிய பகுதிகளுக்கான ரயில் சேவை இல்லாததால், செல்ல வேண்டிய இடத்திற்கு பேருந்துகளில் கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர். கால் டாக்சி, ஆட்டோ, வாடகை கார்களில் அதிக விலை கொடுத்து சென்றனர்.
பண்டிகைக்கு செலவிடுவதற்காக திட்டமிட்டிருந்த பட்ஜெட்டைவிட, அதிகளவு பணம் செலவானதாக, குடும்பத்தினர் புலம்பினர்.
பயணியரின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய, அரசு சார்பில் கூடுதல் பேருந்து இயக்கப்பட்டது.
எனினும், ரயில் ரத்தால் தாம்பரம், குரோம்பட்டை, பல்லாவரம், பெருங்களத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதியில், அரசு பேருந்துகளில் வழக்கதைவிட கூட்ட நெரிசல் அதிகம் காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
களைகட்டிய தி.நகர்
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில், வார விமுறை நாளான நேற்று, தி.நகரில் புத்தாடை, பட்டாசு, இனிப்பு வாங்க மக்கள் கூட்டம், கூட்டமாக படையெடுத்தனர்.
தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டி பஜார் என, அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.
பொருட்கள் வாங்க வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக, பாண்டிபஜார் பன்னடுக்கு வாகன நிறுத்தம், உஸ்சான் சாலை மேம்பாலம் உட்பட பல இடங்களில் 'பார்க்கிங்' ஏற்படுத்தப்பட்டது. இதனால், வாகனங்களை நிறுத்துவதிலும், எடுத்து செல்வதிலும் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால், ஒரே நேரத்தில் அதிகப்படியான வாகனங்கள் வந்ததால், நாகேஸ்வர ராவ் சாலை, துரைசாமி சாலை, உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
போக்குவரத்தை சீர்செய்ய, 10 ஆய்வாளர்கள் உட்பட 75க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் என, 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஏமாற்றம்
நேற்று, ஞாயிறு விடுமுறை என்பதால், குடும்பத்துடன் குரோம்பேட்டையில் உள்ள பிரபல ஜவுளி கடைகளில் துணி எடுக்க சென்றோம். மின்சாரம் ரயில் ரத்து என்பதை அறிந்து ஏமாற்றம் அடைந்தோம். இதனால், பேருந்தில் நெரிசலில் சிக்கி பயணித்தோம். விழாக்காலத்தை ஒட்டிய விடுமுறை நாளில், மின்சார ரயில் பராமரிப்பு பணியை தவிர்த்து, வேறொரு நாளுக்கு ஒத்திவைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
ஆர்.கன்னியம்மாள், மறைமலை நகர்.
அவஸ்தை
தீபாவளி ஷாப்பிங் செய்ய தாம்பரம் வந்தேன். மின்சார ரயில் ரத்தால், பேருந்து நிலையம், நிறுத்தங்களில் நிற்பதில்கூட சிரமம் ஏற்பட்டது. பேருந்தில் வழக்கத்தைவிட கூட்ட நெரிசல் இருந்தது. சுட்டெரிக்கும் வெயிலில் நெரிசலில் சிக்கி குழந்தைகளுடன் செல்ல அவஸ்தை ஏற்பட்டது.
- என்.ஜெயந்தி, பெருங்களத்துார்.
அலைச்சல்
தி.நகரில் ஆடைகள், பொருட்கள் வாங்க கிளம்பினோம். ரயிலில் பயணித்தால், குறைந்த கட்டணத்தில் விரைவாக செல்லலாம் என, பல்லாவரம் ரயில் நிலையம் சென்றோம். அங்கு சென்ற பின்தான், ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, பேருந்து நிலையத்திற்கு சென்று, பேருந்தில் தி.நகர் வந்தோம். பண்டிகை காலத்தில், ரயில் சேவையை ரத்து செய்யாமல் இருந்திருக்கலாம்.
- டி.ஆஷா, பல்லாவரம்.
- நமது நிருபர் -