UPDATED : செப் 08, 2026 04:52 PM
ADDED : செப் 08, 2026 04:50 PM
எண்ணுார்:எண்ணுார் - அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள உயர்மட்ட மின் கேபிள் அறுந்ததால், விரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டன.
சென்னை புறநகர் ரயில் சேவையில், சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் என, இரு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, எண்ணுார் - அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையத்திற்கு இடையே உள்ள உயர்மட்ட மின் கேபிள் திடீரென அறுந்து விழுந்தது. இதனால் இரு வழித்தடத்தில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டன.
அதே நேரத்தில் ஆலப்புழா - தன்வாத் செல்லும் தன்வாத் விரைவு ரயிலும், திருவனந்தபுரம் - கோர்பா செல்லும் கோர்பா விரைவு ரயிலும் திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன.
இதையடுத்து ரயில்வே தொழில்நுட்ப பிரிவினர் அறுந்து விழுந்த உயர்மட்ட மின் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் பெய்த மழையால் அங்கிருந்த மின்சார கேபிள் அறுந்து உயர்மட்ட மின் கேபிள் மீது விழுந்ததில், கேபிள் அருந்ததாக கூறப்படுகிறது.
அறுந்து விழுந்த மின் கேபிளை, சீரமைக்கும் பணி நேற்று அதிகாலை 3:40 மணிக்கு முடிந்தது. நான்கு மணி நேரத்துக்கு பின், ரயில் சேவை சீரானது.
