/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'3டி' ஓவியத்தில் அசத்தும் மாற்றுத்திறனாளி அவரது கைவண்ணத்தில் ஆவடியில் உருவாகுது பொக்கிஷங்கள்
/
'3டி' ஓவியத்தில் அசத்தும் மாற்றுத்திறனாளி அவரது கைவண்ணத்தில் ஆவடியில் உருவாகுது பொக்கிஷங்கள்
'3டி' ஓவியத்தில் அசத்தும் மாற்றுத்திறனாளி அவரது கைவண்ணத்தில் ஆவடியில் உருவாகுது பொக்கிஷங்கள்
'3டி' ஓவியத்தில் அசத்தும் மாற்றுத்திறனாளி அவரது கைவண்ணத்தில் ஆவடியில் உருவாகுது பொக்கிஷங்கள்
ADDED : ஜூன் 30, 2025 03:54 AM

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி மனோஜ்குமார், 45. பிறக்கும்போதே வலது கை ஊனத்துடன் பிறந்தார். போலியோ பாதிப்பால் இடது கால் சற்று செயலிழந்து போனது.
சிறு வயதில் அவரது ஓவியத் திறமையை கண்டறிந்த தாய், ஓவியப் பள்ளியில் சேர்த்து விட்டார்.
அதன் வாயிலாக விளம்பர பலகை, வாகனங்களுக்கு 'நம்பர்' எழுதும் பணியை செய்து வந்தார். அதில் போதிய வருமானம் இல்லாததால், மனைவி அவரை பிரிந்து சென்றார்.
இதனால், துயரங்களுடன் கடினமாக போராடி வந்தார். தற்போது, பெற்றோர் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கொல்லம் மாவட்டம், கோட்டாரக்கரை பகுதியில் உள்ள கணபதி கோவிலில், சுவர்களில் ஓவியங்கள் வரையும் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு கையுடன் அவர் வரைந்த ஓவியங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன. 'இறையருள் பெற்ற ஒருவரால் மட்டுமே இப்படி வரைய முடியும்' என அனைவரும் அசந்து போயினர்.
அவரது திறமையை கண்டு, திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் அட்வகேட் பி.எஸ்.பிரசாந்த் என்பவர் வியந்து பாராட்டினார்.
கடந்தாண்டு சபரிமலை, மாளிகைபுரம் அருகிலுள்ள அன்னதான மண்டபத்தில் சுவாமி அய்யப்பன் வாழ்க்கை வரலாற்றை, ஓவியமாக வரையும் வாய்ப்பு வழங்கினார்.
அவர் வரைந்த ஓவியங்கள், '3டி' ஓவியங்கள் போல் காட்சி அளித்தன. இவை, பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்தன. வலது கையில் வண்ணங்கள் குழைத்து, அவர் கைவண்ணத்தில் உருவான 30 அடி உயர ஓவியங்கள் பொக்கிஷங்களாக மாறின.
அந்த வகையில், ஆவடி, பக்தவத்சலபுரத்தில் உள்ள அய்யப்பன் கோவில் செயலர் ஹரிஷ் என்பவர் சபரிமலைக்கு சென்ற போது, மனோஜ்குமாரின் ஓவியத் திறமையை கண்டு வியந்தார்.
ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ள 37ம் ஆண்டு அய்யப்பன் கோவில் பிரதிஷ்டை தினத்தில், அவரை கவுரவிக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மனோஜ்குமார், ஆவடி அய்யப்பன் கோவிலுக்கு வரவழைக்கப்பட்டார்.
அங்கும் தன் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்த மனோஜ்குமார், கோவிலில் கண்கவர் அய்யப்பன் 3டி ஓவியங்களை வரைந்து வருகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள், அவரின் ஓவியங்களை பார்த்து வியந்து பாராட்டி வருகின்றனர்.
- நமது நிருபர் -