ADDED : ஜன 31, 2025 12:25 AM

சென்னை :வடசென்னை கடற்கரையில், ஆமைகள் தொடர்ச்சியாக இறந்து கரை ஒதுங்குவதால், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அரியவகை கடல்வாழ் உயிரினமான, ஆலிவ் ரிட்லி ஆமைகள், நவ., - பிப்., மாதங்களில் இனப்பெருக்கத்திற்காக, தமிழக கடற்கரைகளை நோக்கி படையெடுக்கும்.
கரைகளில் முட்டைகள் இட்டு, பின் ஆழ்கடலுக்கு செல்லும். இந்நிலையில், கடற்கரைக்கு வரும் ஆமைகள் தொடர்ச்சியாக, இறந்து கரை ஒதுங்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது.
அந்த வரிசையில், காசிமேடு, செரியன் நகர், திருவொற்றியூர் - திருச்சினாங்குப்பம் கடற்கரைகளில், நேற்று 20க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின.
நேற்று முன்தினம் நீலாங்கரை பகுதியில் 20க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.
அழுகிய நிலையில், கடும் துர்நாற்றம் வீசி வரும் ஆமைகளால், சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இனப்பெருக்கத்திற்காக கரைக்கு வரும் ஆமைகள், படகுகள், வலைகளில் சிக்கி இறந்து கரை ஒதுங்குவதாக, கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்கும் சம்பவம், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
