ADDED : ஜூன் 10, 2025 12:17 AM
சென்னை, சி.ஐ.டி.,நகர் பிரதான சாலையில் நெரிசலை குறைப்பதற்காக புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட, த.வெ.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.
தி.நகரில், சி.ஐ.டி. நகர் - உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமான பணி, 131 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, 2023ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியினருக்கு ஆதரவாக, த.வெ.க.,வினர் போராட்டம் அறிவித்தனர்.
ஆனால், போலீஸ் அனுமதி கொடுக்காததால், நேற்று காலை தெற்கு வடக்கு மாவட்ட த.வெ.க., செயலர் அப்புனு தலைமையில், 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மாம்பலம் போலீசார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க.,வினரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பின் மாலை அனைவரையும் விடுவித்தனர்.