ADDED : ஏப் 17, 2026 10:11 PM
குமரன் நகர்:லோடு ஆட்டோ ஓட்டுநரிடம், வீண் தகராறு செய்து கல்லால் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பூர் ஜானகிராம் நகரை சேர்ந்தவர் ராஜேஷ், 37; லோடு ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 15ம் தேதி இரவு, சைதாப்பேட்டையில் உள்ள தன் மனைவியின் அக்கா வீட்டிற்கு சென்றிருந்தார்.
பின், ஈஸ்வரன் கோவில் தெரு, மேட்லி சப்வே அருகே நின்று மனைவியின் அக்காவுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த இருவர், 'நீ எந்த ஏரியா, இங்கு ஏன் வந்தாய்' என, கேட்டு ராஜேஷிடம் வீண் தகராறு செய்துள்ளனர்.
மேலும், வாக்குவதம் முற்றிய நிலையில், ராஜேஷை கல்லால் தாக்கினர். அவரது மனைவியின் அக்கா கூச்சலிடவே, அவர்கள் தப்பி சென்றனர்.
இதுகுறித்து விசாரித்த குமரன் நகர் போலீசார், ராஜேஷை தாக்கிய மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த முரளி, 40; பாண்டிச்சேரியை சேர்ந்த அருண், 36 ஆகிய இருவரை கைது செய்தனர்.
விசாரணையில் இருவரும் ஆட்டோ ஓட்டுநர்கள் என்பதும், குமரன் நகர் காவல் நிலைய பழைய குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது.
