ADDED : செப் 20, 2026 08:04 PM
குன்றத்துார்: குன்றத்துார் அருகே சிறுகத்துாரைச் சேர்ந்தவர் விக்னேஷ், 24; ஆட்டோ ஓட்டுநர். கடந்த 18ம் தேதி இரவு, குன்றத்துார் அருகே தண்டலத்தில், நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், விக்னேஷை சரமாரியாக தாக்கி, தலையில் கல்லை போட்டு அவரது நண்பர்கள் கொலை செய்தனர்.
விசாரணையில், குன்றத்துார் கோவூரைச் சேர்ந்த பிரபு, 32, என்பவரிடம், 6,000 ரூபாயை, விக்னேஷ் கடனாக பெற்றுள்ளார். பணத்தை திருப்பி தருமாறு கேட்டதால் விக்னேஷ், பிரபுவை தாக்கியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பிரபு, சம்பவத்தன்று விக்னேஷை மது அருந்த அழைத்து சென்று, கொளப்பாக்கத்தைச் சேர்ந்த சாரதி, 23, ஆகியோருடன் சேர்ந்து தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து பிரபு, சாரதி ஆகியோரை குன்றத்துார் போலீசார் நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
