/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டாக்டரின் மொபைல் போனை திருடிய இருவர் கைது
/
டாக்டரின் மொபைல் போனை திருடிய இருவர் கைது
ADDED : ஆக 11, 2025 01:42 AM

சென்னை:ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், இரவு பணியில் இருந்த டாக்டரின் மொபைல் போனை திருடிய நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், ஜூலை 21ம் தேதி, ஷியாம்சுந்தர் என்ற டாக்டர் இரவுப்பணியில் இருந்தார். மறுநாள் அதிகாலையில், ஓய்வு அறையில் இருந்தபோது, ஷியாம்சுந்தரின் மொபைல் போனை மர்ம நபர் திருடியுள்ளார்.
இதுகுறித்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஜாவித், 25, என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளை நோட்டமிட்டு, நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் மற்றும் டாக்டர்கள், செவிலியர்களின் மொபைல் போன்களை திருடி, திருவல்லிக்கேணி பகுதியில் தங்கியுள்ள, மெபூ அலாம், 22, என்பவரிடம் விற்று வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, மெபூ அலாம் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், திருட்டு மொபைல் போன்களை குறைந்த விலைக்கு வாங்கி, வெளி மாநிலங்களுக்கு கடத்தி வருவதும் தெரிந்தது.
இதையடுத்து, இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, நான்கு மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களை, காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.