/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
243 கிலோ குட்கா கடத்தல் அயனாவரத்தில் இருவர் கைது
/
243 கிலோ குட்கா கடத்தல் அயனாவரத்தில் இருவர் கைது
ADDED : ஆக 04, 2025 04:17 AM

அயனாவரம், :பெங்களூருவில் இருந்து கடத்தி சென்னையில் விற்க முயன்ற, 243 கிலோ குட்கா போதைப் பொருட்களை பறிமுதல் செய்த அயனாவரம் போலீசார், அது தொடர்பாக இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
அயனாவரம், கொன்னுார் நெடுஞ்சாலையில், அதிக அளவில் குட்கா போதை பொருள் கடத்துவதாக, அயனாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கொன்னுார் நெடுஞ்சாலை பழைய காவல் நிலையம் அருகில், நேற்று அதிகாலை 5:30 மணி முதல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, 6:00 மணிக்கு, 'டி.வி.எஸ்., ஜூபிடர்' ஸ்கூட்டரில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது, அவர் வைத்திருந்த பையில், 10 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், குன்றத்துார், முத்தாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார், 57, என்பதும், மாங்காட்டில் இருந்து குட்காவை கொண்டு வந்ததும் தெரிந்தது.
அவரிடமிருந்த குட்காவை பறிமுதல் செய்த போலீசார், அவர் அளித்த தகவலின்படி மாங்காட்டுக்கு சென்று, அங்கு அவரிடம் குட்கா கொடுத்து அனுப்பிய, மாங்காடு, அம்பாள் நகரை சேர்ந்த பெரியபால்ராஜ், 35, என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில், நேற்று முன்தினம், பெங்களூரு, பொம்மசந்திரா சந்தையில் இருந்து, 300 கிலோ குட்கா போதை பொருட்களை, பெரியபால்ராஜ் வாங்கி வந்ததும், அவற்றை சிறிது விற்று, 40,000 ரூபாய் பெற்றதும் தெரிந்தது.
அது தவிர, ஒரு மூட்டையை அயனாவரத்தில் உள்ள கடைக்கு, செந்தில்குமாரிடம் கொடுத்து அனுப்பியதும், மீதமுள்ள 234 கிலோ குட்கா பொருட்களை, அவரது 'ஹுண்டாய் கிரீட்டா' காருக்குள் மறைத்து வைத்திருப்பதும் தெரிந்தது.
அவரிடமிருந்த குட்கா பொருட்களுடன், 40,000 ரூபாய், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், மேலும் விசாரிக்கின்றனர்.