ராபிடோ ஓட்டுநரிடம் ரூ.1,400 பெற்று ஏமாற்றிய இருவர் கைது
ராபிடோ ஓட்டுநரிடம் ரூ.1,400 பெற்று ஏமாற்றிய இருவர் கைது
UPDATED : நவ 19, 2026 05:15 PM
ADDED : நவ 19, 2026 05:10 PM
சென்னை: ராபிடோ ஓட்டுநரிடம் ஆன்லைன் வாயிலாக கூகுள் பேவில் 1,400 ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதுடன், கூட்டாளியுடன் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டித் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
சூளைமேட்டைச் சேர்ந்தவர், லோகேஷ்வரன், 29. இவர், ராபிடோ எனும் இருசக்கர வாகனம் ஓட்டி வருகிறார். கடந்த 14 ம் தேதி தேவா, 26, என்பவர் சூளைமேட்டில் இருந்து தி.நகருக்குச் செல்ல அவரது வாகனத்தை முன்பதிவு செய்தார். பயணத்தின்போது, தனக்கு ஒருவர் பணம் தர வேண்டியிருப்பதாகக் கூறி லோகேஷ்வரனை அசோக் நகருக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு காத்திருந்தபோது, 1,400- ரூபாய் கூகுள் பே வாயிலாக அனுப்புமாறும், ரொக்கமாகத் தருவதாகவும் தேவா கூறியுள்ளார்.
பணத்தைப் பெற்ற பின் தேவா அங்கிருந்து சென்றதால், லோகேஷ்வரன் அவரைப் பின்தொடர்ந்து அசோக் நகர் 2 வது அவென்யூ, 8 வது தெரு சந்திப்புக்குச் சென்றார். அங்கு தேவாவின் கூட்டாளியான சிலம்பரசன், 25, சிறிய கத்தியைக் காட்டி மிரட்டினார். தேவா தாக்கியதில் லோகேஷ்வரன் உதட்டில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்த புகாரின்படி அசோக் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேவா மற்றும் சிலம்பரசனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
