ADDED : ஏப் 10, 2025 11:56 PM
கொரட்டூர், பாடியில், 'தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ்' என்ற கடை அமைந்துள்ளது. அங்கு தங்கம், வெள்ளி, வைர நகைகள், சிறுவர் முதல் பெரியவர் வரையிலானோருக்கு ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.
இதில், நகை பிரிவு மேலாளர் இளையராஜா என்பவர், கடந்த மாதம் 16ம் தேதி, கடையில் உள்ள நகைகளின் இருப்பு குறித்து கணக்கீடு செய்துள்ளார். அதில், தங்கம் மற்றும் வைர நகைகள் இருப்பு மற்றும் விற்பனையில் முரண்பாடு இருப்பது தெரியவந்தது. மொத்தம், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மயமானதை கண்டு பிடித்தார்.
இது குறித்து, கிளை மேலாளர் சுரேஷ், 53, என்பவர், கடந்த 17ம் தேதி, கொரட்டூர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
சந்தேகத்தின் அடிப்படையில், தங்க நகை பிரிவு கவுன்டர் பொறுப்பாளரான, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், 29 மற்றும் வைர நகை கவுன்டர் பொறுப்பாளரான மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார், 37 ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில், இருவரும் சேர்ந்து நகைகளை எடுத்து மறைத்து, கையாடல் செய்தது தெரியவந்தது. இருவரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்தனர்.