/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூடப்பட்டிருந்த ராயப்பேட்டை மேம்பாலத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி இருவர் பலி இளைஞர்களின் பைக் ரேஸால் விபரீதம்
/
மூடப்பட்டிருந்த ராயப்பேட்டை மேம்பாலத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி இருவர் பலி இளைஞர்களின் பைக் ரேஸால் விபரீதம்
மூடப்பட்டிருந்த ராயப்பேட்டை மேம்பாலத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி இருவர் பலி இளைஞர்களின் பைக் ரேஸால் விபரீதம்
மூடப்பட்டிருந்த ராயப்பேட்டை மேம்பாலத்தில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி இருவர் பலி இளைஞர்களின் பைக் ரேஸால் விபரீதம்
ADDED : நவ 07, 2025 02:08 AM

சென்னை: ராயப்பேட்டையில், மூடப்பட்டிருந்த மேம்பாலத்தில் அத்துமீறிய இளைஞர்களின் பைக் ரேஸால் நடந்த கோர விபத்தில், கல்லுாரி மாணவர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
சென்னையில், இரவு வேளைகளில் பைக் ரேஸ், கார் ரேஸ் போவது சமீபமாக அதிகரித்துள்ளது.
ரேஸ் ரோமியோக்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த, சென்னையின் பிரதான சாலைகளில் இரும்பு தடுப்புகள் அமைத்து, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பல இடங்களில் மேம்பாலங்கள் இரவு நேரத்தில் மூடப்படுகின்றன.
அந்த வகையில், நேற்று முன்தினம் இரவு மூடப்பட்டிருந்த ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில், கோர விபத்து நடந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சக வாகன ஓட்டிகளின் உதவியுடன் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில், ராயப்பேட்டையைச் சேர்ந்த சையது சர்தார் பாஷா, 19, மற்றும் ராயப்பேட்டை பேகம் பிரதான சாலையைச் சேர்ந்த குமரன், 46, ஆகியோர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதில், சையது சர்தார் பாஷா, புதுக்கல்லுாரியில் பி.காம் படித்து வந்தார். குமரன், தி.நகரில் கவரிங் நகைக்கடை நடத்தி வருவதும், அவருக்கு மனைவி, 15 மற்றும் 7 வயதில், இரு மகள்கள் இருப்பதும் தெரிய வந்தது.
காயமடைந்த ஐஸ்ஹவுஸைச் சேர்ந்த முகமது சுஹைல், 20, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது:
முகமது சுஹைல் மற்றும் சையது சர்தார் பாஷா, நேற்று முன்தினம் இரவு ஆயிரம் விளக்கு மசூதி பகுதியில் இருந்து, மூடப்பட்டிருந்த பீட்டர்ஸ் சாலை மேம்பாலம் வழியாக, விதிமீறி பைக் ரேஸ் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது, முகமது சுஹைலை முந்தி செல்ல முயன்ற சையது சர்தார் பாஷாவின் 'யமஹா ஆர்15பைக்', எதிரே அண்ணாசாலை நோக்கி வந்து கொண்டிருந்த, குமரனின் 'ஹோண்டா' பைக் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர்.
அப்போது, மற்றொரு பைக்கில் வந்த முகமது சுஹைலும் காயமடைந்துள்ளார்.
இவ்வாறு தெரிய வந்தது.
இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனரா, அப்படியென்றால் வேறு யார் யாரெல்லாம் ஈடுபட்டனர் என்பது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

