கட்டுமான பணியின்போது விபரீதம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி காயமடைந்த இருவர் ‘அட்மிட்’
கட்டுமான பணியின்போது விபரீதம் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி காயமடைந்த இருவர் ‘அட்மிட்’
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 07:14 PM
நங்கநல்லுார்: கட்டுமான பணியின்போது மின்சாரம் பாய்ந்து, மேற்கு வங்கத்தை சேர்ந்த, 26 வயதான தொழிலாளி பரிதாபமாக இறந்தார். பலத்த தீக்காயமடைந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நங்கநல்லுார், ஹிந்து காலனி, இரண்டாவது பிரதான சாலையை சேர்ந்தவர் நந்தகுமார். இவருக்கு சொந்தமான, 1,500 சதுர அடி நிலத்தில், இரண்டடுக்கு மாடி வீடு கட்டி வருகிறார்.
முதல் தளத்தில், ‘சென்ட்ரிங்’ வேலை நடந்து வந்தது. அதில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த மங்கள் அஸ்ரா, 26, பழவந்தாங்கல் பி.வி.நகரை சேர்ந்த ராமு, 26, நேரு காலனியை சேர்ந்த குணா, 48, ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
மூவரும் நேற்று காலை இரும்பு கம்பிகளை சுமந்தபடி, மாடிப்படிகளில் ஏறி சென்றனர். அப்போது, உயர் மின்னழுத்த மின்கம்பி மீது, இரும்பு கம்பிகள் உரசின.
மின்சாரம் பாய்ந்து, மூவரும் துாக்கி வீசப்பட்டு, படியில் மயங்கி விழுந்தனர். அங்கிருந்தவர்கள், மூவரையும் நங்கநல்லுாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகிச்சைக்காக, தாம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே, மங்கள் அஸ்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மின்சாரம் பாய்ந்ததில் தீக்காயம் அடைந்த ராமு, குணா இருவருக்கும், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, பழவந்தாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
