/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி மும்பை வாலிபர்கள் இருவர் கைது
/
வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி மும்பை வாலிபர்கள் இருவர் கைது
வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி மும்பை வாலிபர்கள் இருவர் கைது
வாலிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி மும்பை வாலிபர்கள் இருவர் கைது
ADDED : நவ 02, 2025 12:30 AM

சென்னை: சென்னை வாலிபரிடம், பயங்கரவாதிகளுக்கு அனுப்பிய பார்சல் இருப்பதாகக் கூறி, 20 லட்சம் ரூபாய் பறித்த, மும்பையை சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
அசோக் நகரை சேர்ந்தவர் சந்தோஷ், 33. இவர், கடந்த ஆண்டு, அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 2024ம் ஆண்டு ஆக., மாதம், மும்பையில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தின் பெயரை கூறி, மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், என் ஆதார் எண்ணை வைத்து முன்பதிவு செய்த ஒரு பார்சல் வந்துள்ளதாக கூறினார்.
பார்சலில், காலாவதியான பாஸ்போர்ட்டுகள், கிரெடிட் கார்டுகள், துணி, தடை செய்யப்பட்ட மருந்துகள் இருப்பதாகவும், அவை பயங்கரவாதிகளுக்கு பயன்படுத்த அனுப்பியதால், மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறினார்.
இவ்வழக்கில் இருந்து விடுவிக்க, மர்மநபர் பணம் கேட்டார். பணம் இல்லாததால், தனியார் வங்கியில் தனிநபர் கடன் பெற்று, 20 லட்சம் ரூபாயை அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.
அதன் பின் தான், நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
சைபர் கிரைம் போலீசார் விசாரணையில், இந்த மோசடி வழக்கில் ஈடுபட்டவர்கள், மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தை சேர்ந்த நரேஷ் கல்யாண் ராவ் ஷிண்டே, 20, ஸ்ரீகாந்த் சுரேஷ்ராவ் கத்கர், 34, என்பதும், அவர்கள் மும்பையில் இருப்பதும் தெரிந்தது.
நேற்று முன்தினம், மும்பை சென்ற போலீசார், இருவரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது, ஏற்கனவே தாம்பரம் சைபர் கிரைம் போலீசில், இதே போன்ற வழக்கு நிலுவையில் உள்ளது.

