/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாவரத்தில் நேருக்குநேர் மோதிய பைக்குகள் சிறுவன் உட்பட இருவர் பலி; மூவர் படுகாயம்
/
பல்லாவரத்தில் நேருக்குநேர் மோதிய பைக்குகள் சிறுவன் உட்பட இருவர் பலி; மூவர் படுகாயம்
பல்லாவரத்தில் நேருக்குநேர் மோதிய பைக்குகள் சிறுவன் உட்பட இருவர் பலி; மூவர் படுகாயம்
பல்லாவரத்தில் நேருக்குநேர் மோதிய பைக்குகள் சிறுவன் உட்பட இருவர் பலி; மூவர் படுகாயம்
ADDED : ஆக 20, 2025 03:11 AM
பல்லாவரம், பல்லாவரத்தில், இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில், சிறுவன் உட்பட இருவர் பலியாகினர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
ஜமீன் பல்லாவரம், காமராஜர் நகரை சேர்ந்தவர் அப்துல் ஹமீது, 18. 'ஏசி' மெக்கானிக். நேற்று முன்தினம் இரவு, கே.டி.எம்., இருசக்கர வாகனத்தில், அதே பகுதியை சேர்ந்த நண்பரான பிளஸ் 1 படிக்கும் சுகைல் ரஷீத், 16, என்ற சிறுவனை ஏற்றிக்கொண்டு, பல்லாவரம் வாரச்சந்தை சாலையில் சென்றார்.
வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதால், எதிர்பாராதவிதமாக, எதிரே மூன்று பேருடன் வந்த 'ஜூபிடர்' ஸ்கூட்டர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், இரு பைக்குகளிலும் இருந்த ஐந்து பேரும் துாக்கி வீசப்பட்டனர்.
இதில் படுகாயமடைந்த சுகைல் ரஷீத், சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற நான்கு பேரும் படுகாயமடைந்தனர். போலீசார் விரைந்து சென்று, உயிருக்கு போராடிய நான்கு பேரையும், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஜூபிடர் ஸ்கூட்டரில் வந்த மூன்று பேரை, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், அப்துல் ஹமீதை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர். பின், சுகைல் ரஷீத்தின் உடலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஜூபிடர் ஸ்கூட்டரில் வந்த மூன்று பேர், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சயான் முகர்ஜி, 23, அம்ஜீத் ரங்கன், 23, ஓரியன் சர்மா, 23, என்பது தெரிய வந்தது.
அவர்கள், விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் ஊழியர்களாக பணிபுரிந்து வந்ததும், இரவு பணி முடிந்து, ஜமீன் பல்லாவரத்தில் உள்ள அறைக்கு சென்றதும் தெரியவந்தது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூவரில், ஓரியன் சர்மா சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
'ரீல்ஸ்' எடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாரச்சந்தை சாலையில்
அதிகரிக்கும் 'ரீல்ஸ்' மோகம்
பல்லாவரத்தில், வெள்ளிக்கிழமைதோறும் வாரச்சந்தை நடக்கும் சாலையில், வாலிபர்கள் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அபாயகரமாகவும் ஓட்டியபடி 'ரீல்ஸ்' எடுப்பது மற்றும் 'ரேஸில்' ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, பல்லாவரம் போலீசாருக்கு பலமுறை தகவல் அளித்தும், அவர்கள் இதை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புகார் வந்தவுடன் ரோந்து சென்று, ரீல்ஸ் மற்றும் ரேஸில் ஈடுபடுவோரை பிடித்து நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. இனிமேலாவது, இவ்விஷயத்தில் அக்கறை செலுத்தி, ரீல்ஸ் மற்றும் ரேஸில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

