/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடிநீர் தட்டுப்பாடு வராது உதயநிதி திட்டவட்டம்
/
குடிநீர் தட்டுப்பாடு வராது உதயநிதி திட்டவட்டம்
ADDED : பிப் 06, 2024 12:32 AM

சென்னை, ''சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில், அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது,'' என, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி கூறினார்.
சென்னை மாநகராட்சி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் 11.98 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற 13 திட்ட பணிகளை அமைச்சர் உதயநிதி துவக்கி வைத்தார். மேலும், 152.67 கோடி ரூபாய் மதிப்பிலான, 52 புதிய திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.
பின், அமைச்சர் உதயநிதி அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னை மேயராக இருந்தபோது, சிங்கார சென்னையாக உருவாக்கினார். இன்று, சிங்கார சென்னை 2.0 உருவாக்கப்பட்டுள்ளது. வேகமாக நகர மயமாகும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. சென்னையுடன் மக்கள் தொகையும் விரிவடைந்து வருகிறது.
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடம் இல்லாத வகையில், அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய தேவைகள் அனைத்தும் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் உடனடியாக தீர்க்கப்பட்டு வருகின்றன. சென்னையின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
கூவம், அடையாறு ஆற்றை துாய்மைப்படுத்தி கரையோரங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வர உள்ளது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.