/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துார்வாரப்படாத புழல் ஏரி உபரிநீர் கால்வாய் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம்
/
துார்வாரப்படாத புழல் ஏரி உபரிநீர் கால்வாய் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம்
துார்வாரப்படாத புழல் ஏரி உபரிநீர் கால்வாய் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம்
துார்வாரப்படாத புழல் ஏரி உபரிநீர் கால்வாய் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம்
ADDED : அக் 05, 2024 12:14 AM

சென்னை, புழல் ஏரி உபரிநீர் கால்வாய் துார்வாரப்படாததால், சென்னையின் பல பகுதிகள், வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது. இந்த ஏரிக்கு வடகிழக்கு பருவமழை காலங்களில், அதிக நீர்வரத்து கிடைக்கிறது. பூண்டி மற்றும் சோழவரம் ஏரியில் இருந்து கால்வாய் வாயிலாக, புழல் ஏரிக்கு நீர் அனுப்பப்படுகிறது.
ஏரியில் தற்போது, 2.21 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கினால், ஏரி முழு கொள்ளளவை விரைந்து எட்டிவிடும்.
நடப்பாண்டு, மழை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. எனவே, குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பாதிக்காத வகையில், வெள்ளநீரை பாதுகாப்பாக வெளியேற்றுவது அவசியம்.
புழல் ஏரியில் இருந்து வெள்ள உபரிநீரை வெளியேற்ற, 11 கி.மீ.,ருக்கு கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாய், திருவள்ளூர் மாவட்டத்தில் துவங்கி, சென்னை மாநகராட்சி பகுதியான வடப்பெரும்பாக்கம், கொசப்பூர், மணலி, சடையங்குப்பம் வழியாக சென்று, வங்கக் கடலில் கலக்கிறது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர்வளத்துறை வாயிலாக, 30 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிதியில் புழல் ஏரியை துார்வாரவும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், போதிய நிதி ஒதுக்கவில்லை என்று கூறி, ஒப்புக்கு ஒரிரு இடங்களில் துார்வாரும் பணிகள், பாலாறு வடிநில வட்ட நீர்வளத்துறை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இதனால், வடப்பெரும்பாக்கம், கொசப்பூர், திருநீலகண்டன் நகர், வடகரை, பாபாநகர், தண்டல்கழனி, சாமியார் மடம் உள்ளிட்ட பல பகுதிகளில் உபரிநீர் கால்வாயில் புதர் மண்டி கிடக்கிறது.
இவை மட்டுமின்றி, ஆங்காங்கே ஆகாயதாமரை, வேலிகாத்தான் செடிகளும் கால்வாய்க்குள் அடர்ந்து உள்ளன. இதனால், வெள்ளநீரோட்டம் பாதிக்கப்பட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது.
மேலும், திருநீலகண்டன் நகர் பகுதியில் தேங்கும் மழைநீரை, உபரிநீர் கால்வாய்க்குள் பாதுகாப்பாக வெளியேற்ற, ரெகுலேட்டர் அமைக்கப்பட்டு இருந்தது. இதை மறைக்கும் அளவிற்கு புதர் மண்டி கிடக்கிறது. முறையாக பராமரிக்காததால், ரெகுலேட்டரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
துார்வாரும் பணிகளை செப்., 30ம் தேதிக்குள் முடிப்பதாக, முதல்வரின் செயலரிடம், நீர்வளத்துறை அதிகாரிகள் உறுதியளித்து இருந்தனர். ஆனால், புழல் ஏரி உபரிநீர் கால்வாயில் இன்னும் பணிகள் துவங்கப்படாதது, கரையோர பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.