ADDED : டிச 18, 2024 12:23 AM

மூலமுதற்கடவுளான கணபதியைப் போற்றி ஹம்சத்வனி ராகத்தில், ஹரிகேஷநல்லுார் முத்தையா பாகவதர் இயற்றிய 'கம் கணபதி நமோ' எனும் ஆதி தாள கிருதியை பாடி, கச்சேரியை திறம்பட துவக்கினார் வைஷ்ணவி.
இதில், சிட்டை ஸ்வரங்களைப் பாடியது மட்டுமல்லாமல், கற்பனை ஸ்வரங்களையும் கோர்வைகளையும் கோர்த்து அழகுற கூட்டினார்.
பின், ஆபோகி ராகத்தை ஆலப்பனையாக பாட, ரசிக கூட்டத்தினர் அதில் திளைத்திருந்தனர். அவர்களுக்கு மேலும் ரசனையூட்டியது, சாரதா மீட்டிய வயலின்.
'நீகெப்புடுதாய வச்சுனு' எனும் மைசூரு சதாசிவ ராவ்வின் கிருதியைப் முடிக்க, அடுத்து என்ன என்பது போல் அனைவரும் ஆவலாக இருந்தனர்.
ராக ஆலாபனை, நிரவல், கற்பனை ஸ்வரங்கள், கோர்வை என அனைத்தையும், பந்துவராளியில் ரூபக தாளத்தில் அமையப்பெற்ற, 'நீது பாதமே கதி' என்ற கிருதியில், மேம்பட வழங்கினர்.
மேலும், சுத்த சாவேரியில் 'தாயே திரிபுரச்சுந்தரி' எனும் பாடலை கண்டசாபு தாளத்தில் பாடி, திரிபுரச்சுந்தரி அம்மனின் அருளை பெற செய்தார்.
முக்கிய உருப்படியாக, தியாகராஜரின் 'தாசுகோவலெனா' எனும் தோடி ராகக் கிருதியை, ராக ஆலாபனை, நிரவல், கற்பனை ஸ்வரங்கள், குறப்பு ஸ்வரங்கள், சர்வலகு மற்றும் கோர்வையில் முடிக்க, ரசிக கூட்டத்தினர் கைகளில் மிஸ்ர ஜம்பை தாளம் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.
அந்த தாள நடையை, தீப்பொறி போல் மாற்றியது, குரு ராகவேந்தராவின் மிருதங்க நடையும், சிவராம கிருஷ்ணனின் கடம் நுணுக்கமும் கலந்த தனி ஆவர்த்தனம்.
இந்த தீச்சூட்டை அணைக்க, வள்ளலாரின் 'வானத்தின் மீது' எனும் திருவருட்பாவை மாண்டு ராகத்தில் பாடினார் வைஷ்ணவி.
தி.நகர் வாணி மஹாலில் நடந்த, மார்கழி இசையில் 'பிள்ளன் கோவிய செல்லுவ' எனும் பாடலை மோகன ராகத்தில் கண்ணனை செல்லம் கொஞ்சி பாடி, தன் கச்சேரியை நிறைவு செய்தது, அனைவரையும் ரசிக்க வைத்தது.
- ரா.பிரியங்கா