ADDED : ஏப் 07, 2026 10:05 PM
சென்னை:அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோர் குறித்து, அவதுாறாகப் பேசியதாக, பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்., மணியனை விடுதலை செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை தி.நகரில், 2023ம் ஆண்டு செப்.,13ல் நடந்த நிகழ்ச்சியில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவர் ஆர்.பி.வி.எஸ்., மணியன், டாக்டர் அம்பேத்கர், திருவள்ளுவர் ஆகியோர் குறித்து, அவதுாறாக கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இது குறித்து, சென்னை மாம்பலம் போலீசில், வி.சி., பிரமுகர் செல்வம் அளித்த புகாரின்பேரில், இந்திய தண்டனை சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், மணியனை 2023ம் ஆண்டு செப்.,14ல் கைது செய்தனர். பின், ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில், மணியனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கார்த்திகேயன், ''குற்றம் சாட்டப்பட்ட மணியன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டவில்லை,'' எனக் கூறி, அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
***
