/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விதிமீறல் பேனர்களை அகற்றாமல் சுருட்டி வைத்து..கண்துடைப்பு!:கல்லா' கட்ட முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள்
/
விதிமீறல் பேனர்களை அகற்றாமல் சுருட்டி வைத்து..கண்துடைப்பு!:கல்லா' கட்ட முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள்
விதிமீறல் பேனர்களை அகற்றாமல் சுருட்டி வைத்து..கண்துடைப்பு!:கல்லா' கட்ட முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள்
விதிமீறல் பேனர்களை அகற்றாமல் சுருட்டி வைத்து..கண்துடைப்பு!:கல்லா' கட்ட முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள்
ADDED : ஏப் 28, 2025 04:12 AM

சென்னையில் பல பகுதிகளிலும், புற்றீசல் போல் பெருகி வரும் விளம்பர பேனர்களால் விபத்து அபாயம் உள்ளது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், விளம்பர பேனர்களை அகற்ற மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். ஆனால், மண்டல அதிகாரிகள், ஆங்காங்கே சில பேனர்களை அகற்றி, 'நாங்களும் வேலை செய்தோம்' என கணக்கு காட்டினர். பல இடங்களில் பேனர்களை அகற்றாமல், கல்லா கட்டும் நோக்கில் சுருட்டி வைத்து, நுாதன வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சமீப காலமாக தனியார் நிறுவனங்கள் சார்பில் உரிய அனுமதியின்றி சாலைகள், கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாமலும், உரிய அனுமதியின்றியும், அதிகாரிகளை தங்கள் பண பலத்தால் விலைக்கு வாங்கி, தனியார் நிறுவனத்தினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், ஆங்காங்கே விளம்பர பேனர்களை அமைத்து வருகின்றனர்.
கடந்த, 2019ம் ஆண்டு அ.தி.மு.க.,வினர் வைத்த பேனர் சாய்ந்து, சுபஸ்ரீ என்ற இளம் பொறியாளர் உயிரிழந்தார். இச்சம்பவத்தை தொடர்ந்து, விளம்பர பேனர் வைக்க உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தடைவிதித்தன.
இந்நிலையில் பேருந்து நிழற்குடைகள், மின் கம்பம் உள்ளிட்டவற்றில் விளம்பரம் வைக்க அனுமதித்து, அதன் வாயிலாக வருவாய் ஈட்ட, மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி, 17,195 தெரு விளக்குகள், 47 சாலை மையத் தடுப்புகள், 61 போக்குவரத்து பூங்காக்கள், 41 பூங்காக்கள் ஆகியவற்றில், தனியார் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி வழங்கி, பெரும் அளவில் வருவாயை ஈட்டி வருகிறது.
தவிர, பிரதான சாலைகளில் ஆங்காங்கே விளம்பரங்கள் அமைக்கவும், மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.
ஒரு இடத்திற்கு மட்டும் அனுமதி பெற்று, அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு, ஆங்காங்கே விளம்பர பேனர்களை ஆளும்கட்சியினர் அமைத்து வருகின்றனர்.
முறையான வழிகாட்டுதல் இன்றி தாறுமாறாக வைத்திருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாக, சமீபத்தில் நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.
அதை தொடர்ந்து, விதிமீறல் விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், வட்டார துணை கமிஷனர்கள், மண்டல அதிகாரிகள், உதவி வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முதற்கட்டமாக, மண்டல வாரியாக அனுமதி வழங்கப்பட்ட விளம்பர பலகைகள் விபரம், நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளவை குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதையடுத்து, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். அவற்றை வைத்தோர் மீது, காவல் நிலையத்தில் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டார்.
பட்டியலை தயாரிப்பதில் மும்முரம் காட்டிய மண்டல அதிகாரிகள், விதிமீறல் பேனர்களை ஆங்காங்கே அகற்றி, நாங்களும் வேலை செய்தோம் என, கணக்கு காட்டினர். பேனர் அகற்றுவதில் பல இடங்களில் அதிகாரிகள் சுணக்கம் காட்டுகின்றனர்.
முக்கிய பிரதான சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றாமல், அவற்றை சுருட்டி, இரும்பு சட்டகத்துடன் இணைத்து கயிற்றால் கட்டி வைத்துள்ளனர்.
தேனாம்பேட்டை உள்ளிட்ட சில மண்டலத்தில் இந்த மாதிரி பேனர்கள், ஆங்காங்கே சுருட்டி வைத்துள்ளனர். உரிய நிறுவனங்களிடம் வசூல் நடத்தும் நோக்கில் இவ்வாறு அதிகாரிகள் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்படி பல இடங்களில், விதிமீறல் பேனர்களை அகற்றாமல் சுருட்டி வைத்திருப்பது, சமூக ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கண்துடைப்பிற்காக மாநகராட்சி செய்யும் இந்த நுாதன நடவடிக்கை, விளம்பரதாரருக்கு உதவியாக இருப்பதாகவே அமையும் என, அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
- நமது நிருபர் -