/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாலவாக்கம் கடற்கரை சாலையில் விதிமீறல்? அனுமதியின்றி சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு!
/
பாலவாக்கம் கடற்கரை சாலையில் விதிமீறல்? அனுமதியின்றி சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு!
பாலவாக்கம் கடற்கரை சாலையில் விதிமீறல்? அனுமதியின்றி சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு!
பாலவாக்கம் கடற்கரை சாலையில் விதிமீறல்? அனுமதியின்றி சாலை அமைப்பதாக குற்றச்சாட்டு!
ADDED : மார் 15, 2024 12:32 AM
பாலவாக்கம், பெருங்குடி மண்டலம் வார்டு 183க்கு உட்பட்ட பாலவாக்கம் கடற்கரை சாலையில், 'பீக் ஹவர்' நேரத்தில் அதிக வாகனங்கள் பயணிக்கின்றன.
இந்த சாலை, 2010ல் புதுப்பிக்கப்பட்டது. 2017ல், புதிய தார் அல்லது சிமென்ட் சாலை அமைக்க கோரிக்கை எழுந்தது.
அப்போது, கடல் ஆமைகள் இந்த கடற்கரையில் முட்டையிட்டு, குஞ்சு பொரிப்பதாக கூறி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எனவே, மத்திய, மாநில அரசின் சுற்றுச்சூழல் தடையில்லா சான்று இருந்தால் மட்டுமே சாலை அமைக்க முடியும் என, பெருங்குடி மண்டல அதிகாரிகள் கூறியதால், 2021 வரை, சாலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், இச்சாலையில் 'பேவர் பிளாக்' சாலை அமைப்பது, அப்பகுதியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வி.ஜி.பி., குடியிருப்போர் நலச்சங்க செயலர் சுவாமிநாதன், 51, கூறியதாவது:
பாலவாக்கம் கடற்கரையில் தார் அல்லது சிமென்ட் சாலை அமைக்க, தடையில்லா சான்று வேண்டி, 2022ல், மத்திய சுற்றுச்சூழல் துறை செயலர் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையரக இயக்குனர் ஆகியோரை அணுகினோம்.
அப்போது, பாலவாக்கம் கடற்கரையில், 1975ம் ஆண்டு முதல் சாலை உள்ளதால், மத்திய அரசின் தடையில்லா சான்று தேவையில்லை எனக்கூறி, இத்தகவலை, தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறைக்கு அனுப்பினர்.
பின், 2022, ஆகஸ்ட் மாதம், தமிழக சுற்றுச்சூழல் துறையை அணுகினோம். இத்துறை தெரிவித்த தகவல்படி, 2023, ஆக., 23ல், சென்னை கலெக்டர் தலைமையில் செயல்படும் டி.சி.இசட்.எம்.ஏ., குழுவிடம் தடையில்லா சான்று வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதற்கான கடிதத்தை, ஆக., 31ல் தமிழக சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பப்பட்டது. அத்துறை வாயிலாக, பெருங்குடி மண்டலத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இக்கடிதத்திற்கு தற்போது வரை பதில் கிடைக்கவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனத்தால், அது கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில், 2024, மே 25ல் பாலவாக்கம் கடற்கரை சாலையில், 855 மீ., துாரத்திற்கு 1.33 கோடி ரூபாய் செலவில், 'பேவர் பிளாக்' சாலை அமைக்க, பூமி பூஜை நடந்தது. அப்பகுதி மக்கள், தடையில்லா சான்றிதழ் பெற, ஆறு ஆண்டுகளாகப் போராடி வந்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல், பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கு மட்டும், பெருங்குடி மண்டல அதிகாரிகளுக்கு எப்படி அனுமதி கிடைத்தது?
தவிர, கனரக வாகனங்களும் பயணிக்கிற பாலவாக்கம் கடற்கரை சாலையில், பேவர் பிளாக் பாதை அமைத்தால், இரண்டு மாதங்கள்கூட தாக்குப்பிடிக்காது என்பது அதிகாரிகளுக்கு தெரியாதா? இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம், விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

