/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விருகம்பாக்கம் கால்வாயில் குப்பை மாநகராட்சி அலட்சியத்தால் சீர்கேடு
/
விருகம்பாக்கம் கால்வாயில் குப்பை மாநகராட்சி அலட்சியத்தால் சீர்கேடு
விருகம்பாக்கம் கால்வாயில் குப்பை மாநகராட்சி அலட்சியத்தால் சீர்கேடு
விருகம்பாக்கம் கால்வாயில் குப்பை மாநகராட்சி அலட்சியத்தால் சீர்கேடு
ADDED : ஜன 13, 2024 12:00 AM

அரும்பாக்கம், விருகம்பாக்கம் கால்வாயில் பல நாட்களாக தேங்கும் காலி மதுபாட்டில்கள், 'பிளாஸ்டிக்' மற்றும் குப்பைக் கழிவுகளால், குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடு நிலவுகிது.
சென்னையில் கூவம், அடையாறு மற்றும் பகிங்ஹாம் கால்வாய் போன்றவை முக்கிய நீர்வழித்தடங்கள். இதுபோல், விருகம்பாக்கம் கால்வாயும் முக்கியமானது.
அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அரும்பாக்கம் அருகில், சூளைமேடு பாரி தெருவில், விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது. நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய் அரும்பாக்கம், சூளைமேடு வழியாக, அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது.
இக்கால்வாயை முறையாக சீரமைக்காததால், கால்வாய் முழுதும், காலி மதுபாட்டில்கள், பிளாஸ்டிக்' மற்றும் குப்பை, கழிவுகள் நிறைந்து காணப்படுகின்றன.
ஆண்டிற்கு பல முறை இக்கால்வாயில் துார் வாரினாலும், பாரி தெருவில் உள்ள தரைப்பாலம் பகுதியில் குப்பை தேங்குவது வாடிக்கையாகி விட்டது.
இதனால், நீரோட்டம் முழுமையாக தடைபட்டு, கழிவுநீர் ஒரே பகுதியில் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
மேலும் கொசுத் தொல்லையும் அதிகமாக இருப்பதாக, பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
நோய்த் தொற்று உருவாகும் சூழல் உள்ளதால், இந்த கால்வாயை ஒட்டியுள்ள பாரி தெரு, கண்ணகி தெருக்களில் குடியிருப்போர் பீதியில் உள்ளனர்.
இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:
மாநகராட்சியின் அலட்சியத்தால், விருகம்பாக்கம் கால்வாயில் தொடர்ந்து, சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அவ்வப்போது, குப்பையை அகற்றி துார் வாரினாலும், நிரந்த தீர்வு கிடைப்பதில்லை.
முன்னதாக இருந்த கழிவுகள், பருவமழையின் போது அடித்துச் செல்லப்பட்டன.
தற்போது, பாரி தெருவில் பல நாட்களாக தரைப்பாலம் பகுதியில் குப்பை தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.
இதேபோல், குடியிருப்போர் பல பிரச்னைகளை சந்திக்கிறோம். குப்பை கழிவுகளை விரைந்து அகற்றி, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.