ADDED : செப் 24, 2024 12:52 AM
சென்னை, செப். 24-
சென்னை, புறநகர் பகுதிகளில் வைரஸ் தொற்று காரணமாக, சளி, இருமல், காய்ச்சல் பரவி வருவதாக, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, தொற்று நோயியல் சிறப்பு மருத்துவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியன் கூறியதாவது:
வைரஸ் தொற்றால் ஏற்படும் ப்ளூ காய்ச்சல், சென்னையில் வழக்கமாக நவ., - டிச., மாதங்களில் அதிகமாக பரவும். ஆனால் இந்த முறை, வெயில் அதிகமாக இருந்தாலும், ஜூலை, ஆக., மாதங்களில் மழையும் பெய்தது. இதனால், ப்ளூ காய்ச்சல் முன்கூட்டியே பரவ ஆரம்பித்துவிட்டது.
சாதாரணமாக, வைரஸ் தொற்றால் ஏற்படும் சளி, இருமல் பாதிப்பால் எந்த பிரச்னையும் இருக்காது; சில நாட்களில் தானாகவே குணமாகிவிடும். ஆனால், ப்ளூ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் சளி, இருமலுடன், உடல் வலி, சுவாச கோளாறு, காய்ச்சல் சேர்ந்தே இருக்கும்.
இந்த அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். தொற்று பாதித்த 48 மணி நேரத்தில் மருந்து கொடுத்தால், உடனடி பலன் கிடைக்கும்.
குழந்தைகள், முதியோர், சர்க்கரை கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானது. தொற்று பரவுவதற்கு, சென்னையில் இருப்போர் பல்வேறு தேவைக்காக பிற மாநிலங்களுக்கு சென்று வருவதும் ஒரு காரணம். தவிர, தொற்று பாதித்த ஒருவர் கைகளால் பயன்படுத்தும் பொருட்களை, மற்றவர்கள் தொடுவதாலும் பரவுகிறது.
அதனால் சுகாதாரமாக இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கொரோனா காலத்தில் கடைபிடித்த பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

