ADDED : நவ 13, 2026 07:31 PM
சென்னை: சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில், ‘வோடபோன் – ஐடியா’ நிறுவனத்தின் ‘நெட்வொர்க்’ சேவை அடிக்கடி முடங்குவதால், வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.
வி.ஐ., எனப்படும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சேவையை, சென்னையில் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சமீப நாட்களாக பல்வேறு பகுதிகளில் நெட்வொர்க் கோளாறு ஏற்பட்டு வருகிறது.
இன்று (நவ.,13) மதியம் 2:10 மணியளவில் சென்னை விமான நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் சேவை பாதிக்கப்பட்டது.
குறிப்பாக, சென்னை விமான நிலையத்திற்குள் சிக்னல் துண்டிக்கப்படுவதால், இ – -டிக்கெட்டுகளைக் காண்பிக்கவும், இணையவழி பணப் பரிவர்த்தனை செய்யவும் முடியாமல் பயணியர் தவித்தனர்.
அதேபோல, மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இணையதள சேவை முடங்கியதால், ‘வாட்ஸாப்’ மற்றும் ‘மெட்ரோ’ செயலி வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் பயணியர் அவதியடைந்தனர். பல நேரங்களில், ‘நோ சர்வீஸ்’ எனக் காட்டுவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்தாலும், தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதாகவே பதில் கிடைக்கிறது. நிரந்தரத் தீர்வு இல்லை.
விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் தடையற்ற சேவை வழங்கவும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, ‘டிராய்’ தலையிட்டு நடவடிக்கை எடுக்கவும் வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை நிறுவன அதிகாரிகள் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
