வார்டு மறுவரையறை குழப்பம் கர்ப்பிணியர் அலைக்கழிப்பு
வார்டு மறுவரையறை குழப்பம் கர்ப்பிணியர் அலைக்கழிப்பு
ADDED : பிப் 21, 2024 02:22 AM
நெற்குன்றம்:சென்னை மாநகராட்சி உள்ளாட்சி தேர்தலுக்காக, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வார்டுகளை மறு வரையறை செய்யும் பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதனால் பல தெருக்கள், வேறு வார்டுகளில் சேர்க்கப்பட்டு, மறு வரையறை செய்யப்பட்டுள்ளன.
இதில், வளசரவாக்கம் மண்டலம், 145வது வார்டில் இருந்து மூகாம்பிகை நகர், முனியப்பா நகர், சண்முகா நகர், திருமலை நகர் உள்ளிட்ட 10 நகர்களில் உள்ள 6,000 வாக்காளர்கள், 148வது வார்டில் சேர்க்கப்பட்டனர்.
நெற்குன்றம் 148வது வார்டில், காமராஜர் சாலையில் ஆரம்ப சுகாதார நிலையமும், 145வது வார்டில் நெற்குன்றம் பல்லவன் நகரில், ஆரம்ப சுகாதார நிலையமும் அமைந்துள்ளன. இந்த சுகாதார மையங்களில் கர்ப்பிணியர் விபரம் பதிவு செய்தல், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிலையில், வார்டு மறு வரையறையின் போது, 145வது வார்டில் இருந்து, 148வது வார்டில் இணைக்கப்பட்ட நகரில் உள்ள கர்ப்பிணியர், 148வது வார்டு காமராஜர் சாலையில் உள்ள சுகாதார மையத்திற்குச் சென்றால், 145வது வார்டில் உள்ள சுகாதார மையத்திற்கு செல்லும்படி, அங்குள்ள ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மேலும், 145வது வார்டிலுள்ள சுகாதார மையத்திற்கு சென்றால், 148வது வார்டிலுள்ள சுகாதார மையத்திற்கு செல்லும்படி கூறி அலைக்கழிக்கின்றனர்.
இதனால், கர்ப்பிணியர் இரு சுகாதார மையங்களுக்கும் அலையும் நிலை உள்ளது. இதற்கு, முறையான தீர்வு காண, மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கர்ப்பிணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
