/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.12.82 லட்சத்தை திருப்பி தராத கட்டுமான நிறுவனத்துக்கு 'வாரன்ட்'
/
ரூ.12.82 லட்சத்தை திருப்பி தராத கட்டுமான நிறுவனத்துக்கு 'வாரன்ட்'
ரூ.12.82 லட்சத்தை திருப்பி தராத கட்டுமான நிறுவனத்துக்கு 'வாரன்ட்'
ரூ.12.82 லட்சத்தை திருப்பி தராத கட்டுமான நிறுவனத்துக்கு 'வாரன்ட்'
ADDED : ஜூலை 29, 2025 12:39 AM
சென்னை, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி வீட்டை ஒப்படைக்காமல், அதற்காக வசூலித்த, 12.82 லட்சம் ரூபாயை திருப்பித்தராத கட்டுமான நிறுவனத்துக்கு, வாரன்ட் பிறப்பிக்க ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா, வேலுார் கிராமத்தில், 'உத்சவ்' என்ற பெயரில், 'நியூ சென்னை டவுன்ஷிப்' நிறுவனம் சார்பில், குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் வீடு வாங்க, தேன்மொழி, ஸ்ரீராம் ஆகியோர் கூட்டாக, 12.82 லட்சம் ரூபாயை செலுத்தினர்.
இதற்கான ஒப்பந்தப்படி, அந்நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை எனக்கூறி, பணம் செலுத்தியவர்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் புகார் செய்தனர்.
இதை விசாரித்த ஆணையம், மனுதாரர் செலுத்திய, 12.82 லட்சம் ரூபாயை வட்டியுடன் திருப்பித்தர வேண்டும்; வழக்கு செலவுக்காக, 20,000 ரூபாய் அளிக்க வேண்டும் என, 2019ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனம் செயல்படுத்தவில்லை. இது குறித்து, மனுதாரர்கள் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மீண்டும் முறையிட்டனர்.
இது தொடர்பாக ரியல் எஸ்டேட் ஆணைய தலைவர் ஷிவ்தாஸ் மீனா தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட நிறுவனம் வீட்டை ஒப்படைக்கவில்லை. அதற்காக வசூலித்த, 12.82 லட்சம் ரூபாயை திருப்பித்தர பிறப்பித்த உத்தரவையும் நிறைவேற்றவில்லை.
எனவே, அந்நிறுவனத்துக்கு எதிராக வாரன்ட் பிறப்பித்து, பணத்தை வசூலிக்க, செங்கல்பட்டு கலெக்டர் நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.