/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு அரசு கேள்விக்கு நீர்வளத்துறை விளக்கம்
/
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு அரசு கேள்விக்கு நீர்வளத்துறை விளக்கம்
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு அரசு கேள்விக்கு நீர்வளத்துறை விளக்கம்
செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு அரசு கேள்விக்கு நீர்வளத்துறை விளக்கம்
ADDED : டிச 22, 2025 04:10 AM
சென்னை: 'கூவம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என்பதில் எந்தவித மெய்தன்மையும் இல்லை' என, நீர்வளத்துறை அரசிற்கு விளக்கம் அளித்துள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கும் கழிவுநீரால், சென்னை மக்களின் சுகாதாரம் பாதிப்பு என்ற தலைப்பில், நம் நாளிதழில் நேற்று, படத்துடன் செய்தி வெளியானது.
இது தொடர்பாக, நீர்வளத்துறையிடம், தலைமை செயலர் முருகானந்தம் அலுவலகத்தில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டு உள்ளது. அதற்கு கொசஸ்தலையாறு வடிநில வட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள விளக்கம் விபரம்:
செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் இணைப்பு கால்வாய்களில் ஒன்று, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து இணைப்பு கால்வாய் வாயிலாக, கூவம் ஆற்றின் குறுக்கே அரண்வாயல் குப்பம் பகுதியில் நீர் குமிழியாக அடியில் சென்று, பின் செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
அரண்வாயல் குப்பம் பகுதியில் நீர் குமிழியாக செல்வதால், கூவம் ஆற்றின் மேல் பகுதியான புட்லுாரில் கலக்கும் கழிவுநீர், இணைப்பு கால்வாயில் கலக்க வாய்ப்பில்லை.
மேலும், கூவம் ஆற்றில் வரும் கழிவுநீர், சென்னையை நோக்கி சென்று நேப்பியர் பாலம் அருகில் கடலில் கலக்கிறது. புட்லுார் பகுதியில், திருவள்ளூர் நகராட்சி வாயிலாக செயல்படும் சுத்திகரிப்பு நிலையம் முழுமையான கொள்ளளவில் இயங்கவில்லை. பகுதி அளவில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், கூவம் ஆற்றில் கலக்கிறது.
இது தொடர்பாக, நீர்வளத்துறை ஆய்வு மேற்கொண்டது. கழிவுநீரை முழுமையாக சுத்திகரிப்பு செய்து வெளியேற்ற, திருவள்ளூர் நகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
எனவே, 'தினமலர்' நாளிதழில் கூவம் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என்பதில் எந்தவித மெய்தன்மையும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

