குடிநீர் வாரிய 'எண்ட் டூ எண்ட்' மென்பொருளில்... குளறுபடி!: நிதி ஒதுக்கீட்டு சிக்கலால் திட்ட பணிகள் பாதிப்பு
குடிநீர் வாரிய 'எண்ட் டூ எண்ட்' மென்பொருளில்... குளறுபடி!: நிதி ஒதுக்கீட்டு சிக்கலால் திட்ட பணிகள் பாதிப்பு
ADDED : ஜூன் 06, 2026 02:52 AM

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தில், நிர்வாக ரீதியாக துரித நடவடிக்கை எடுப்பதற்காக தொடங்கப்பட்ட, 'எண்ட் டூ எண்ட்' மென்பொருளில் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், நிதி ஒதுக்கீடு தாமதமாகியுள்ளது. இதனால், நீரேற்று நிலையங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவது, லாரி குடிநீர் வினியோகம் மற்றும் திட்ட பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னை குடிநீர் வாரியத்தில், தினமும் 125 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக, ஒன்பது சுத்திகரிப்பு நிலையங்கள், 143 பகிர்மான நிலையங்கள் உள்ளன. குடிநீர் சுத்திகரிப்புக்கு பின் 75 சதவீதம் கழிவுநீராக வெளியேறுகிறது. இதற்காக, 771 கழிவுநீர் உந்து நிலையங்கள், 22 சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.
அபராதம் இந்த நிலையங்களை இயக்க, தனி மின்மாற்றி அமைத்து மின்சாரம் வழங்கினால், மாதந்தோறும் மின் கட்டணம்; இதர மின்மாற்றிகளில் இருந்து மின்சாரம் வழங்கினால், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்த வேண்டும்.
மின் பயன்பாட்டு கட்டணத்தை, அந்தந்த மண்டல பொறியாளர்கள், காசோலை வாயிலாக குறிப்பிட்ட தேதியில் செலுத்தி வந்தனர்.
அதேபோல், குடிநீர் வாரிய தொலைபேசி கட்டணம், நிலையங்களை இயக்க தேவையான டீசல், உபகரணங்கள் மற்றும் அவசர பணி, திட்ட பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க வேண்டும்.
இதற்கான கோப்புகள் எல்லாம், அந்தந்த இளநிலை பொறியாளர்கள் முதல் மேலாண்மை இயக்குநர் வரை உள்ள அதிகாரிகள் பார்வைக்கு சென்று, கையெழுத்து பெற்று, காசோலை வாயிலாக வழங்கப்பட்டு வந்தது.
கோப்புகளை கிடப்பில் போடுவது, அவற்றை கையாளுவதில் காலதாமதம் போன்ற காரணங்களால், கூடுதல் செலவு மற்றும் அபராதம் செலுத்தும் சூழல் ஏற்பட்டது.
நடவடிக்கை இதனால், 'ஆன்லைன்' வாயிலாக நேரடியாக, அந்தந்த துறை மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் பணம் சேரும் வகையில், 'இன்டர்லேஸ்' என்ற நிறுவனம் வாயிலாக, 'எண்ட் டூ எண்ட்' என்ற திட்டம், ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இதற்கென பிரத்யேக 'சாப்ட்வேர்' எனும் மென்பொருளும் அமலுக்கு வந்தது.
மின் கட்டணம், டீசல், வாகனம் உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல், குடிநீர் ஒப்பந்த லாரிகள் மற்றும் திட்ட பணிகள் முடிந்த பின் வழங்கும் பணத்தை, இந்த மென்பொருள் வாயிலாக செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடியால், மின் கட்டணம் செலுத்துவதில் காலதாமதம், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், திட்டப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மின் கட்டண வகையில், 7 கோடி ரூபாய்; லாரிகளுக்கு குடிநீர் வினியோகத்திற்கான, 1.5 கோடி ரூபாய் வரை விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர, 6,000 கோடி ரூபாயில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அவற்றுக்கான நிதி விடுவிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
மக்களுக்கு வழங்கும் துரித சேவை போல், நிர்வாக நடவடிக்கையை துரிதப்படுத்தவும், நிதி இழப்பை தடுக்கவும், 'எண்ட் டூ எண்ட்' திட்டம் கொண்டு வரப்பட்டதை வரவேற்கிறோம்.
சோதனை அடிப் படையில், ஒரு வார்டு அல்லது ஒரு மண்டலம் என எடுத்து, திட்டத்தை துவங்கி, சரி பார்த்தபின் அடுத்தடுத்த மண்டலங்களில் விரிவுப்படுத்தி இருக்க வேண்டும்.
பிரச்னை ஆனால், 15 மண்டலங்களிலும் ஒரே நேரத்தில், இத்திட்டத்தை துவங்கியதால், சர்வர் பிரச்னை, வங்கி கணக்கு சரியான நபருக்கு சேராதது, உயர் அதிகாரிகள் பார்வைக்கு ஆன்லைன் வழியாக கோப்புகளை அனுப்புவதில் குளறுபடி போன்ற பிரச்னை கள் ஏற்பட்டுள்ளன.
இதனால், உரிய நேரத்தில் மின் கட்டணம் செலுத்த முடியாமல், அபராதத்துடன் செலுத்த வேண்டி உள்ளது. லாரி குடிநீர் ஒப்பந்ததாரர்களுக்கான நிதி வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதால், குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
அவசர பணி மற்றும் திட்ட பணிகளுக்கு வழங்க வேண்டிய நிதியும் முறையாக சேராததால், பணிகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உயர் அதிகாரிகள் தலையிட்டு, மென்பொருளில் உள்ள குளறுபடிகளை நீக்கி, திட்டத்தை வேகப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
