/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தினம் 10 குடிநீர் இணைப்பு தாம்பரத்தில் துண்டிப்பு
/
தினம் 10 குடிநீர் இணைப்பு தாம்பரத்தில் துண்டிப்பு
ADDED : பிப் 06, 2025 12:32 AM
தாம்பரம், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளுக்கு, வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம், மேலச்சேரி, வில்லியம்பாகக்கம் பாலாறு படுகையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து குழாய் வாயிலாக குடிநீர் எடுத்து வரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
மாநகராட்சியில் எஞ்சியுள்ள பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், சிட்லப்பாக்கம், திருநீர்மலை பகுதிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் மெட்ரோ வாரியம் வாயிலாக, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
மற்ற பகுதிகளில், உள்ளூர் ஆதாரம் வாயிலாக தண்ணீரை உறிஞ்சி, சுத்திகரிப்பு செய்து வழங்குகின்றனர்.
மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களிலும், குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், வீட்டு வரி, குப்பை வரி உள்ளிட்ட வரி இனங்கள், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் இறுதிக்குள் வசூல் செய்வது வழக்கம்.
இதற்காக, ஆட்டோ பிரசாரம், ஊழியர்கள் வாயிலாக நோட்டீஸ் வினியோகம் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அப்படியிருந்தும், 100 சதவீத வசூலை எட்ட முடியவில்லை.
கடந்த ஆண்டு, 87 சதவீதம் மட்டுமே வசூலாகியது. இந்த நிதியாண்டிற்கான வரி இனங்களை வசூல் செய்யும் நடவடிக்கை, ஜனவரி முதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மற்றொரு நடவடிக்கையாக, வரி இனங்களை நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ள வீடுகளின் விபரங்களை சேகரித்து, அந்த வீடுகளுக்கு, மாநகராட்சி வருவாய் துறை வாயிலாக, 'நோட்டீஸ்' வழங்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட அவகாசத்திற்குள் கட்டணம் செலுத்தாத வீடுகளின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையில், நிர்வாகம் இறங்கியுள்ளது.
அந்த வகையில், ஐந்து மண்டலங்களிலும், நிலுவை தொகை செலுத்தாத இணைப்புகள், தினமும் 10க்கும் மேற்பட்டவை துண்டிக்கப்படுகின்றன. இதற்காக, ஒவ்வொரு வார்டுக்கும், நான்கு பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அக்குழு, வார்டில் நிலுவை வைத்துள்ள வீடுகளுக்கு சென்று, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டிக்கும். சிலர், இதை தவிர்க்க உடனடியாக கட்டணம் செலுத்துகின்றனர்.
வீட்டுக்காரர், நிலுவை தொகையை செலுத்தியதும், 'ரீ கனெக் ஷன்' கட்டணம் வசூல் செய்யப்பட்டு, மீண்டும் இணைப்பு வழங்கப்படுகிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.