/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலம்
/
கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED : மார் 03, 2026 05:42 AM

திருவொற்றியூர்: மாசி பிரம்மோத்சவ பெருவிழாவின், முக்கிய நிகழ்வான கல்யாண சுந்தரர் - மனோன்மணி தாயார் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை, திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், மாசி பிரம்மோத்சவ பெருவிழா, பிப்., 22ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம், பிப்., 28ல் நடந்தது. மற்றொரு முக்கிய நிகழ்வான, கல்யாண சுந்தரர் - மனோன்மணி தாயார் திருக்கல்யாணம், நேற்று கோலாகலமாக நடந்தது.
முன்னதாக, கோவில் வளாகத்தில் சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பின், வசந்த மண்டபத்தில், திருமண கோலத்தில் கல்யாண சுந்தரர் - மனோன்மணி தாயார் எழுந்தருளினர். கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு, ஹோமம் துவங்கியது.
கல்யாண சுந்தரருக்கு பூணுால், காப்பு அணிவிக்கப்பட்டு, வெண்பட்டு சாத்தப்பட்டது. பின், மங்கல வாத்தியம், வேதமந்திரங்கள் முழங்க, அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது, கூடியிருந்த, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், 'ஒற்றீசா... தியாகேசா...' என, விண்ணதிர முழங்கினர்.
திருக்கல்யாணம் நடந்த மகிழ்ச்சியில் பெண்கள், சாக்லேட் உள்ளிட்ட இனிப்புகள், வளையல், மஞ்சள் குங்கும பொட்டுடன் கூடிய மஞ்சள் கயிறு ஆகியவற்றை பரிமாறிக்கொண்டனர்.
மாலையில், 63 நாயன்மார்கள் வீதி உலா உத்சவம்; இரவு மகிழடி சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று, கடலாடு தீர்த்தவாரி உத்சவம், கொடியிறக்கம், 4ம் தேதி இரவில், தியாகராஜ சுவாமி பந்தம் பறி உத்சவம், 18 திருநடனம் நிகழ்வுடன், மாசி பெருவிழா நிறைவடைய உள்ளது.

