/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
துாய்மை பணி முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரிகள். களையெடுப்பு .. 11 பேர் இடமாற்றம்; 15 பொறியாளர்களுக்கும் சிக்கல்
/
துாய்மை பணி முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரிகள். களையெடுப்பு .. 11 பேர் இடமாற்றம்; 15 பொறியாளர்களுக்கும் சிக்கல்
துாய்மை பணி முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரிகள். களையெடுப்பு .. 11 பேர் இடமாற்றம்; 15 பொறியாளர்களுக்கும் சிக்கல்
துாய்மை பணி முறைகேடு புகாரில் சிக்கிய அதிகாரிகள். களையெடுப்பு .. 11 பேர் இடமாற்றம்; 15 பொறியாளர்களுக்கும் சிக்கல்
ADDED : நவ 27, 2025 03:01 AM

- நமது நிருபர் -: அம்பத்துார் மண்டலத்தில் துாய்மை பணியில் இல்லாத 400 பேரை கணக்கு காட்டி, மாதம் ஒரு கோடி ரூபாய் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முறைகேடுக்கு உடந்தையாக இருந்ததாக, 11 உதவி செயற்பொறியாளர்களை, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், பருவமழை முடிந்த பின், 15 வார்டு அதிகாரிகளும் மாற்றப்படுவர் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி, அம்பத்துார் மண்டலத்தில், 15 வார்டுகள் உள்ளன. இதில், மூன்று வார்டுகளில் மட்டும் 'ராம்கி' நிறுவனம், குப்பை மேலாண்மை பணியை கையாண்டு வருகிறது.
மீதமுள்ள 12 வார்டுகளில், மாநகராட்சி தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ், 1,150 துாய்மை பணியாளர்கள், பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ஜ., புகார் இவர்களில் பலர், துாய்மை பணியில் ஈடுபடாமல், அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் அலுவலக மற்றும் வீட்டு பணியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. துாய்மை பணியாளர்கள் சில இயக்கங்களில் சேர்ந்து முறையாக பணிக்கு வராமல், முறைகேடில் ஈடுபட்டதாகவும் புகார்கள் வந்தன.
குறிப்பாக, பா.ஜ., மாநில செயலர் 'கராத்தே' தியாகராஜன், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரனிடம், சில தினங்களுக்கு முன் புகார் அளித்தார்.
அளித்த புகாரில், 'அம்பத்துார் மண்டலத்தில், பணியில் இல்லாத, 400 துாய்மை பணியாளர்க ளுக்கு கணக்கு காட்டி, மாதந்தோறும் ஒரு கோடி ரூபாய் ஊழல் நடந்து வருகிறது.
இதில், 400 பேரின் சம்பளம் யாரிடம் போகிறது என தெரியவில்லை. மாதம், ஒரு கோடி ரூபாய் முறைகேடு நடக்கிறது. இதுகுறித்து, மாநகராட்சி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' என்றார்.
இதுகுறித்து விசாரணை நடத்த, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டார். அதன்படி, அம்பத்துார் மண்டல திடக்கழிவு மேலாண்மை உதவி செயற் பொறியாளர் கோமதி, மின்துறை உதவி பொறியாளர்கள் பிரகாஷ், ஜெகதீஷ்வரி உள்ளிட்ட 11 பேர், வளசரவாக்கம், பெருங்குடி உள்ளிட்ட மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஏமாற்று வேலை இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மையில் நடந்த முறைகே டில், எங்களை மட்டும் பலிகடா ஆக்கியிருப்பதாக, மாநகராட்சியின் தெருவிளக்குகளை பராமரிக்கும் மின்துறை உதவி பொறியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, மின் துறை பொறியாளர்கள் கூறியதாவது:
அம்பத்துார் மண்டலத்தில் உள்ள துாய்மை பணியாளர்கள் பலர் கவுன்சிலர்கள், அதிகாரிகளுக்கு உதவியாக பணியாற்றினர்.
இதுகுறித்து பிரச்னை எழுந்தபோதே, எங்களிடம் இருந்த துாய்மை பணியாளர்களை விடுவித்தோம்.
ஆனால், வார்டு உதவி பொறியாளர்கள், கவுன்சிலர்கள், மண்டல அலுவலர் ஆகியோரிடம், துாய்மை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். அவர்களை துாய்மை பணிக்கும் மாற்றாமல், தங்கள் சொந்த வேலைக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
அப்படி செயல்படும் அதிகாரிகளை மாற்றாமல், எங்களை மட்டும் பலிகடா ஆக்கியுள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகள் கூறியதாவது:
துாய்மை பணியாளர்கள் முதல் ஷிப்டில், 6:30 மணிக்குள் பணிக்கு வர வேண்டும். இரண்டாம் ஷிப்டில், 1:30 மணி; மூன்றாம் ஷிட்ப்டில், 9:30 மணிக்குள், வருகையை பதிவு செய்ய வேண்டும்.
அம்பத்துார் மண்டலத்தில் பெரும்பாலானோர், தாமதமாக பணிக்கு வருவது, அவ்வாறு வந்தாலும் ஓரிரு மணி நேரம் மட்டுமே பணியாற்றி வீட்டிற்கு செல்வதாக உள்ளனர்.
மேலும், அம்மண்டலத்தில் துாய்மை பணியாளர்களிடம், மாதந்தோறும் சில இயக்கத்தினர், 2,000 ரூபாய் வரை சந்தா என்ற பெயரில் கமிஷன் வசூலித்து வருகின்றனர்.
அந்த இயக்கத்தினருடன் உடந்தையாக இருந்தவர்கள், இம்முறைகேடுக்கு காரணமான அனைவரும் மாற்றப்பட்டு வருகின்றனர்.
பருவமழை முடிந்தப்பின், 15 வார்டு பொறியாளர்களும் கட்டாயம் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

