/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இயற்கை ஆடை கண்காட்சி பெசன்ட் நகரில் வரவேற்பு
/
இயற்கை ஆடை கண்காட்சி பெசன்ட் நகரில் வரவேற்பு
ADDED : அக் 20, 2024 12:42 AM

சென்னை, இயற்கை ஆடைகளை தயாரித்து, மக்களிடம் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும், 'துலா' அமைப்பின் 10ம் ஆண்டு விழா, பெசன்ட் நகர் 'ஸ்பேசஸ்' அரங்கில் நேற்று துவங்கியது.
'ஆஷா' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவித்பா குருகாந்தி, முன்னாள் எம்.பி.,யும் காதி ஆர்வலருமான அனீல் ஹெக்டே, சேத்ணா ஆர்க்கானிக் நிறுவனத்தின் அருண் அம்பதிபுடி ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, தங்களின் கருத்துக்களை பரிமாறினர்.
இதையடுத்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள், ஆடை, உணவு பொருட்கள் மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பாளர்களை, துலா அமைப்பின் நிர்வாகி அனந்து அறிமுகப்படுத்தி, அவர்களை கவுரவித்தார்.
ஆந்திராவின் பேண்டுருரு கிராம பெண்கள், பாரம்பரிய பருத்தியிலிருந்து, விதையை நீக்கி, மீன் கழுத்து எலும்பு கொண்டு சீர்படுத்தி, கையால் நுால் நுாற்பது குறித்து விளக்கினர்.
தவிர, இயற்கை முறையில் ஆடைகளுக்கு சாயமிடுதல் உள்ளிட்டவை குறித்தும், அந்தந்த அரங்கத்தினர் விளக்கம் அளித்தனர்.
இயற்கை உணவுப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள், அதிமதுரம் டீ, கருப்புகவுனி பாயாசம், காட்டுயானம் அவல் மற்றும் கட்லட், மாப்பிள்ளை சம்பா புட்டு ஆகியவற்றை, பார்வையாளர்கள் விரும்பி சுவைத்தனர்.
கண்காட்சியில் தேங்காய் ஓட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.
இன்றுடன் முடியும் இக்கண்காட்சியை, காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை காணலாம்.