ADDED : அக் 07, 2024 01:21 AM
மணலி,:மணலி, மாத்துார் 2வது பிரதான சாலையில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின், சென்னை மாநகர், திருவொற்றியூர் மாவட்டம் சார்பில், அணிவகுப்பு பேரணி, பொதுக்கூட்டம், நேற்று மாலை நடந்தது.
அப்போது, பகவா கொடிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பின், மேள தாளங்கள் முழங்க, கொடி ஏந்தியபடி, 1,000 பேர் பங்கேற்ற அணிவகுப்பு ஊர்வலம் துவங்கியது.
மாத்துார், 2வது பிரதான சாலையில் துவங்கி, முக்கிய வீதிகள் வழியாக வந்து, மீண்டும் துவங்கிய இடத்திலேயே நிறைவுற்றது.
பின், பொது கூட்டத்தில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் விவேகானந்தன் பேசியதாவது:
காந்தி, நாட்டு மக்கள் அரசியல்வாதிகள் எளிமையாக இருக்க வேண்டும் என எண்ணினார். அந்த பணிகளை, ஆர்.எஸ்.எஸ்., செய்து வருகிறது. இயற்கை சீற்றங்களில், ஆர்.எஸ்.எஸ்., உதவியது கண்டு, இந்திராவே ஆச்சரியப்பட்டார்.
ராமருக்கு கோவில் கட்டி விட்டோம். ஆனால், இதயத்தில் இன்னும் கட்டவில்லை. இன்றைய மாணவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்பதை பெருமையாக சொல்லி கொள்கின்றனர். தமிழ் நம் கலாசாரம், தெய்வீகம் சார்ந்தது. அதை, தெரிந்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
விழாவில், ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கடேசன், தமிழ்நாடு பறையர் இயக்க தலைவர் சிவகுரு பறையானார், வடசென்னை ரெட்டியார் சங்க செயலர் ராஜா சங்கர், மணலி நாடார் சங்க நிர்வாகி சந்திர மோகன், ஆர்.எஸ்.எஸ்., திருவொற்றியூர் மாவட்ட தலைவர் விஷ்ணுபகவான்கார் உட்பட பலர் பங்கேற்றனர்.

