sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.272 கோடியில் தயாரான துறைமுகம்; 7 மாதம் கடந்தும் பயன்பாட்டுக்கு வராத அவலம்

/

ரூ.272 கோடியில் தயாரான துறைமுகம்; 7 மாதம் கடந்தும் பயன்பாட்டுக்கு வராத அவலம்

ரூ.272 கோடியில் தயாரான துறைமுகம்; 7 மாதம் கடந்தும் பயன்பாட்டுக்கு வராத அவலம்

ரூ.272 கோடியில் தயாரான துறைமுகம்; 7 மாதம் கடந்தும் பயன்பாட்டுக்கு வராத அவலம்

4


UPDATED : ஜன 05, 2026 08:05 AM

ADDED : ஜன 05, 2026 06:09 AM

Google News

UPDATED : ஜன 05, 2026 08:05 AM ADDED : ஜன 05, 2026 06:09 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

திருவொற்றியூரில், 272 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட சூரை மீன்பிடி துறைமுகம், ஏழு மாதங்களாகியும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் முடங்கியுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுகம், 1980ல், 570 படகுகள் கையாளும் வகையில் கட்டப்பட்டு, பின், 2,000 படகுகள் நிறுத்தும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இருப்பினும் பற்றாக்குறை நிலவியதால் மாநில நிதி, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயினங்கள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என, 272 கோடி ரூபாய் செலவில், திருவொற்றியூர் குப்பத்தில், சூரை மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிகள் 2019 ஜூனில் துவங்கின.

அதன்படி, தென்கிழக்கு அலை தடுப்பு சுவர், 2,801 அடி துாரம்; வடகிழக்கு அலை தடுப்பு சுவர், 1,815 அடி துாரம்; சிறிய மற்றும் பெரிய படகு அணையும் தளம், 1,815 அடி துாரம், மீன் ஏலக்கூடம், வானொலி கோபுரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன், 68 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டன.

இந்நிலையில், அலை தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு, துறைமுக வளாகம் அலை பாதிப்பின்றி குளம் போல் காட்சியளிக்க வேண்டும். ஆனால், தென்கிழக்கு - வடகிழக்கு அலை தடுப்பு சுவர்கள் ஒரே இடத்தில் சந்திப்பது போலவும், அந்த இடைவெளி வழியாக படகுகள் துறைமுகத்திற்குள் வருவது போன்றும் இதன் கட்டமைப்பு உள்ளது.

இதனால், துறைமுக நீர்பரப்பு வளாகத்தில் ஆக்ரோஷமாக சீறிப்பாயும் அலைகளால் படகுகள் சேதமடைந்து வருகின்றன. எனவே, தென்கிழக்கு அலை தடுப்பு சுவரை, 330 அடி துாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் என, மீனவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையில், திட்டமிட்ட பணிகள் முடிந்து, சூரை மீன்பிடித் துறைமுகத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 25ல் திறந்து வைத்தார். ஆனால், தென்கிழக்கு அலை தடுப்பு சுவர் நீட்டிக்கப்படாததால், மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த முடியவில்லை.

மேலும், விசைப்படகுகள், பைபர் படகுகளுக்கு மானிய டீசல் வழங்கும் பங்க், பார்க்கிங் பகுதி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக, சூரை மீன்பிடித் துறைமுகத்தில் எந்தவொரு வர்த்தகமும் நடைபெறவில்லை. மாறாக, உள்ளூர் மீனவர்கள் மட்டும், தங்கள் படகுகளை நிறுத்தி வைத்து கடலுக்கு சென்று வருகின்றனர்.

அவர்களின் படகுகளும், புயல், காற்றழுத்த தாழ்வுநிலையின் போது, கடல் சீற்றத்தில் சிக்கி சேதமாகி வருகின்றன. சமீபத்திய, 'டிட்வா' புயல் தாக்கத்தின்போது கூட, படகுகளை துாக்கி வந்து கடற்கரைகளில் வழக்கமாக பத்திரப்படுத்துவது போல், துறைமுக வளாகத்தில் நிறுத்தியிருந்த படகுகளை, மீனவர்கள் துாக்கி வந்து, கரை பகுதிகளில் பத்திரப்படுத்திய அவலம் அரங்கேறியது.

சென்னை மற்றும் காசிமேடு துறைமுகங்களில், வடகிழக்கு அலை தடுப்பு சுவர் உட்புறமாகவும், தென்கிழக்கு அலை தடுப்பு சுவர் வெளிப்புறமாக சற்று நீண்டு இருப்பது போலவும், திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுகத்தை வடிவமைக்க வேண்டும்.

இல்லாவிடில், 272 கோடி ரூபாயில் கட்டப்பட்ட இந்த துறைமுகம், பயன்படுத்த முடியாமல் வீணாகிவிடும் என, அப்பகுதி மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சூரை மீன்பிடித் துறைமுக பணிகள் முடிந்துள்ளன. அதேநேரம் டீசல் பங்க் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்க உள்ளன. அனைத்து வசதிகளும் முழுமை பெற்று, விரைவில் துறைமுகம் பயன்பாட்டிற்கு வரும்; வர்த்தகம் துவங்கும்' என்றார்.

வலைப்பின்னலுக்கு தனி கூடம் வேண்டும்


உள்ளூர் மீனவர்கள் கூறியதாவது: சூரை மீன்பிடித் துறைமுகத்தில் வெளி வர்த்தகம் ஏதும் நடக்கவில்லை. மாறாக, உள்ளூர் மீனவர்களே, காசிமேடு சென்றுதான் மீன்களை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்படும் எங்களின் சிறிய பைபர் படகுகள் அலையால் தள்ளாடியபடி நிற்கின்றன.

புயல், காற்றழுத்த தாழ்வு நிலையில்போது, படகுகள் சேதமடைகின்றன. இங்கு, விசைப்படகுகள் நிறுத்த ஏதுவான வசதியே கிடையாது. குறிப்பிடும் அளவிற்கு, 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தினால், பேரிடர் காலங்களில் கடும் பாதிப்பு ஏற்படலாம்.

மேலும், சூரை மீன்பிடி வர்த்தகம் துவங்கும் பட்சத்தில், உள்ளூர் மீனவர்களுக்கு, வலை பின்னுதல் போன்ற பணிகளுக்கு இடம் இருக்காது. எனவே, தங்களுக்கு வலை பின்னுதல் போன்ற பணிகளுக்கு தனி கூடம் அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சமூக விரோதிகள் கூடாரமாகுது?

பயன்பாட்டில் இல்லாத திருவொற்றியூர் சூரை மீன்பிடித் துறைமுக வளாகம், மது அருந்துவோர் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சமீபத்தில், கொலை வழக்கு ஒன்றில் இங்கு பதுங்கியிருந்த குற்றவாளியை, திருவொற்றியூர் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். எனவே, துறைமுகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தவிர, இங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.








      Dinamalar
      Follow us