/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பாரம் சுமக்கும் அண்ணா மேம்பாலம் தினசரி நெரிசலுக்கு தீர்வு தான் என்ன?
/
பாரம் சுமக்கும் அண்ணா மேம்பாலம் தினசரி நெரிசலுக்கு தீர்வு தான் என்ன?
பாரம் சுமக்கும் அண்ணா மேம்பாலம் தினசரி நெரிசலுக்கு தீர்வு தான் என்ன?
பாரம் சுமக்கும் அண்ணா மேம்பாலம் தினசரி நெரிசலுக்கு தீர்வு தான் என்ன?
ADDED : நவ 04, 2024 04:38 AM

சென்னை:சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக சுதாகர் நியமிக்கப்பட்ட பின், நெரிசலை குறைக்க, பல்வேறு முக்கிய சாலை சந்திப்புக்களில் உள்ள சிக்னல்களை அடைத்து, சற்று துாரம் தள்ளி சென்று, 'யு டர்ன்' எடுக்கும் நடைமுறையை அமல்படுத்தினார்.
இந்த வகையில், அண்ணாசாலையில் நெரிசலை தவிர்க்க, சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பகுதிகளில் யு டர்ன் நடைமுறை கொண்டு வரப்பட்டு, நெரிசல் ஓரளவு குறைந்தது.
சைதாப்பேட்டையில் இருந்து அனைத்து சிக்னல்களையும் எளிதில் கடந்து வரும் வாகனங்கள் அனைத்தும், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு முன் தேங்கி, எந்த நேரமும் அண்ணா மேம்பாலத்தில் வாகனங்கள் நிற்கின்றன. தேனாம்பேட்டை சிக்னல் முதல் ஆயிரம் விளக்கு பகுதியை கடப்பதற்கு, 30 நிமிடங்களுக்கு மேலாகிறது.
அண்ணா மேம்பாலம் இறக்கத்தில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதாலும், சாலையோர கடைகளுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுவது, டாஸ்மாக் கடைக்கு சரக்கு இறக்க வரும் வாகனத்தை நிறுத்துவது, கிரீம்ஸ் சாலைக்கு செல்லும் வாகனங்களால் அண்ணா மேம்பாலம் முதல் ஒயிட்ஸ் சாலை - அண்ணாசாலை சந்திப்பு வரை தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
'பீக் ஹவர்ஸ்' நேரங்களில் போக்குவரத்து போலீசார் இருப்பதால், போக்குவரத்தை சீர் செய்கின்றனர். மதிய நேரங்களில் போக்குவரத்து போலீசார் இருப்பதில்லை. அப்போது கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதில், ஆம்புலன்ஸ் வாகனங்களும் தப்புவதில்லை.
இப்பிரச்னைக்கு தீர்வாக, அண்ணா மேம்பாலம் இறக்கத்தில் ஆயிரம் விளக்கு பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தாமல், போலீசார் முழு நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
அண்ணா சாலையில் இருந்து கிரீம்ஸ் சாலைக்கு திரும்ப முடியாமல், வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால், பாரிமுனை நோக்கி செல்லும் மற்ற வாகனங்கள் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, கிரீம்ஸ் சாலை செல்லும் வாகனங்கள் தேங்காமல் செல்வதற்கு வசதியாக, மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டும். சாலையை விரிவாக்கம் செய்யவும் முயற்சிக்க வேண்டும்.
கிரீம்ஸ் சாலை - அண்ணாசாலை சந்திப்பு பகுதிக்கு மிக அருகே 100 மீட்டர் இடைவெளியில், கிரீம்ஸ் சாலையிலிருந்து அண்ணாசாலை வழியாக தேனாம்பேட்டை செல்லும் வாகனங்களுக்கு, 'யு டர்ன்' அனுமதிக்கப்படுகிறது. இதனால், கிரிம்ஸ் சாலையில் இருந்து வெளியேறும் வாகனங்கள் மீண்டும் அண்ணாசாலையில் முட்டுக்கட்டை ஏற்படுத்துகின்றன. இதை தவிர்க்க, யு டர்ன் வசதியை மாற்றியமைக்க வேண்டும். இந்த இடத்தில் யு டர்ன் வசதியை அடைத்து, ஸ்பென்சர் சிக்னல் அருகே உள்ள யு டர்ன் வசதியை பயன்படுத்த வேண்டும்.
இதன் வாயிலாக அண்ணாசாலையில் நெரிசலை ஓரளவு தவிர்க்க முடியும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயிரம்விளக்கு மசூதி அருகே சாலை மிகவும் குறுகலாக உள்ளது. தற்போது வாகனங்களில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப சாலை விரிவாக்கம் செய்யப்படவேண்டும். அண்ணாசாலை, டி.வி.எஸ்., முதல் ஜி.பி.,சாலை வரை சாலை அகலமாக உள்ளது. அதேபோல், ஆயிரம்விளக்கு பகுதியிலும் சாலை அகலப்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது.
உதவி ஆய்வாளர்,
போக்குவரத்து காவல் துறை