/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'சைக்கிள் கால' சுரங்கப்பாதை விரிவாக்கம் எப்போது? பீக் ஹவரில் இ.பி., காலனியில் நெரிசல்; அவசர தேவைக்கு தவிப்பு
/
'சைக்கிள் கால' சுரங்கப்பாதை விரிவாக்கம் எப்போது? பீக் ஹவரில் இ.பி., காலனியில் நெரிசல்; அவசர தேவைக்கு தவிப்பு
'சைக்கிள் கால' சுரங்கப்பாதை விரிவாக்கம் எப்போது? பீக் ஹவரில் இ.பி., காலனியில் நெரிசல்; அவசர தேவைக்கு தவிப்பு
'சைக்கிள் கால' சுரங்கப்பாதை விரிவாக்கம் எப்போது? பீக் ஹவரில் இ.பி., காலனியில் நெரிசல்; அவசர தேவைக்கு தவிப்பு
ADDED : பிப் 20, 2025 12:13 AM

திருநின்றவூர்,திருநின்றவூர் நகராட்சி, 1வது வார்டு, இ.பி., காலனி சாலை அருகே, 'டி.ஐ.. 98' எனும் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதை 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. துாரம் 90 அடி; அகலம் 4 அடி.
குறுகிய அளவிலான சுரங்கப்பாதை 50 ஆண்டுகளுக்கு முன், சைக்கிள் பயன்பாடு பெருமளவில் இருந்த, அப்போதைய தேவையை கருத்தில் வைத்து கட்டப்பட்டது. ஆனால், தற்போதைய காலத்திற்கு உகந்ததாக இல்லை. இதனால் ஒருவழிப்பாதையாக உள்ளது.
இந்த சுரங்கப்பாதையின் சுற்றுவட்டத்தில், பெரியார் நகர், அம்பிகை அம்மன் நகர், ஆர்.வி.நகர், தனகோடி நகர், முத்தமிழ் நகர், திருவேங்கட நகர், சுதேசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏழு தனியார் பள்ளிகள் உள்ளன.
அதுமட்டுமல்லாமல், வேலைகளுக்கு செல்வோர், சி.டி.எச்., பிரதான சாலைக்கு செல்வோர் என, தினமும் 15,000க்கும் மேற்பட்டோர் இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், 'பீக் ஹவர்' வேளைகளில், அவசர தேவைகளுக்கு செல்லும் மக்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கழிவு நீர் கால்வாய்
அதுமட்டுமல்லாமல், அவசர மருத்துவ தேவைக்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள், பெரியார் நகர், திருவேங்கட நகர் பிரதான சாலையில் 1.5 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய அவலம் உள்ளது. இதன் காரணமாக தேவையில்லாத மன உளைச்சல் மற்றும் வீண் போக்குவரத்து செலவு ஏற்படுகிறது.
சுரங்கப்பாதையில் பல இடங்கள் சேதமடைந்து 'சிமென்ட்' காரை பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.
சில மாதங்களுக்கு முன், பகுதிவாசிகள் இணைந்து, சுரங்கப்பாதையில் போக்குவரத்து நிறுத்தி, சாலையை சீரமைத்தனர். சுற்றுவட்டாரத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சுரங்கப்பாதையில் ஓடுவதால் சாலை குண்டும் குழியுமாக மாறி கழிவுநீர் கால்வாய் போல் காட்சியளிக்கிறது.
பாதசாரிகள் மற்றும் மாணவ - மாணவியர் கழிவுநீரில் நடந்து செல்லும் அவலம் தினமும் நீடிக்கிறது.
அதேபோல், மின் விளக்கு வசதியும் போதிய அளவு இல்லாததால், இரவில் இவ்வழியாக செல்லும் பெண்கள் 'பீதி'யில் பயணிக்கின்றனர்.
எனவே, விரிவாக்கம் செய்து புது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வரைபடம் தயார்
பல ஆண்டுகளாக பகுதிவாசிகள் சென்று வர, சரியான பாதை இல்லை. தற்போது பயன்படுத்தி வரும் சுரங்கப்பாதையும் சிதிலமடைந்து, எந்த நேரமும் இடிந்து விழும் சூழல் உள்ளது. கடந்த ஜூலை மாதம், பொதுமக்கள் சார்பில், புதிதாக சுரங்கப்பாதை அமைக்க இரண்டு விதமான வரைபடம் தயாரித்து, ரயில்வே நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி னேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
- பவுர்ணமி, 41, சமூக ஆர்வலர்.

