/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இதுவரை 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை எப்போது தீர்வு? மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கிடுக்கிப்பிடி
/
இதுவரை 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை எப்போது தீர்வு? மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கிடுக்கிப்பிடி
இதுவரை 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை எப்போது தீர்வு? மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கிடுக்கிப்பிடி
இதுவரை 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை எப்போது தீர்வு? மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கிடுக்கிப்பிடி
ADDED : ஆக 26, 2025 11:47 PM

சென்னை,: சென்னை மாநகராட்சியில், தெருநாய் மட்டுமின்றி வளர்ப்பு நாய்களும் கடித்துக் குதறும் சம்பவங்கள் தொடரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதில், மாநகராட்சி தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில், 'சென்னையில் உள்ள, 1.80 லட்சம் நாய்களில், 27 சதவீதம் மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நாய்களுக்கு கருத்தடை செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்; நாய்கள் தொல்லை எப்போது தான் தீரும்' என, கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
சென்னை மாநகராட்சி மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் நடந்த விவாதம்:
* பாத்திமா அஹமத், இ.யூ.மு.லீ., 61வது வார்டு: சென்னையில், 1.80 லட்சத்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. இதில், 27 சதவீத நாய்களுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள நாய்களுக்கு எப்போது கருத்தடை செய்யப்படும். முழுமையாக கருத்தடை செய்து, கட்டுப்படுத்த இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்.
அதுவரை, தெரு நாய்கள் இனப்பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும். இவற்றை கட்டுப்படுத்த, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மேயர் பிரியா: சென்னையில் தினமும், 3,000 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. வளர்ப்பு நாய்களுக்கும் கருத்தடை செய்ய, அறிவுரை வழங்கப்பட்டு, அவற்றுக்கு தடுப்பூசி முறையாக செலுத்தப்பட்டு வருகிறது.
மண்டலத்திற்கு ஒரு இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அவை, இந்தாண்டு டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு வரும். அதன்பின், இனப்பெருக்க கட்டுப்பாட்டு பணிகள் அதிகரிக்கும்.
துணை மேயர் மகேஷ்குமார்: வளர்ப்பு நாய்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், நாய் வளர்ப்போர் அவற்றை முறையாக கடைப்பிடித்து, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மக்களை அச்சுறுத்தும், 'ராட்விலர்' போன்ற நாய்கள் வளர்ப்பதை தடை செய்ய வேண்டும்.
மாநகராட்சி இணை கமிஷனர் ஜெயசீலன்: ராட்விலர், பிட்புல் நாய்களை தடை செய்வது குறித்து, உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது. அந்த உத்தரவை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோபிநாத், வி.சி., 65வது வார்டு: ஜாதி பெயரில் அமைக்கப்படும் வணிக வளாகங்களுக்கு, தொழில் அனுமதி அளிக்க கூடாது. சென்னையில் வசிக்கும் திருநங்கையரை தொழில் முனைவோராக மாற்ற, அவர்களுக்கு பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்.
கண்ணகி நகரில், மின் கசிவால் உயிரிழந்த துாய்மை பணியாளர் குடும்பத்திற்கு, கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில் பணியாற்றிய துாய்மை பணியாளர்களுக்கு, தொடர்ந்து 23,000 ரூபாய் ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.
மேயர் பிரியா: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்த துாய்மை பணியாளர் குடும்பத்திற்கு, 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.

