/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மண்டல அலுவலகம் எப்போ தான் கட்டுவீங்க? ஒன்றரை ஆண்டாக தவிக்கும் ஆலந்துார்வாசிகள்
/
மண்டல அலுவலகம் எப்போ தான் கட்டுவீங்க? ஒன்றரை ஆண்டாக தவிக்கும் ஆலந்துார்வாசிகள்
மண்டல அலுவலகம் எப்போ தான் கட்டுவீங்க? ஒன்றரை ஆண்டாக தவிக்கும் ஆலந்துார்வாசிகள்
மண்டல அலுவலகம் எப்போ தான் கட்டுவீங்க? ஒன்றரை ஆண்டாக தவிக்கும் ஆலந்துார்வாசிகள்
ADDED : ஜன 24, 2025 12:33 AM
ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட அலுவலகம் ஆலந்துார், புதுத்தெருவில் இயங்கி வந்தது. அந்த இடம் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு தேவைப்பட்டதால், மண்டல அலுவலக கட்டடம் இடிக்கப்பட்டது.
இதையடுத்து, மண்டல அலுவலகம் இயங்க காந்தி தெருவில் புதிதாக கட்டப்பட்ட கட்டடம் கோரப்பட்டது. அது பல்நோக்கு மருத்துவமனைக்காக கட்டப்பட்டது என்பதால், அந்த இடத்தில் மண்டல அலுவலகம் செயல்பட மறுக்கப்பட்டது.
இதையடுத்து, கிண்டி, அருளயம்பேட்டை, எலக்ட்ரானிக்ஸ் காம்ப்ளக்ஸ் அருகில், டேன்சிட்கோ பிளாக் - -2ல் உள்ள கார்மென்ட்ஸ் வளாகத்தில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மண்டல அலுவலகம் செயல்பட துவங்கியது.
ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட மக்கள், புகார் மனுக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சொத்து வரி வசூல், கட்டட வரைபட அனுமதி உள்ளிட்ட மாநகராட்சி சார்ந்த அனைத்து சேவைகளும் பெற, கிண்டியில் உள்ள ஆலந்துார் மண்டல அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில், ஆலந்துார் புதுத்தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட அரசு இடத்தில் ஒரு பகுதியில் ஆலந்துார் மண்டல அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவின்படி, 1.10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
அந்த இடத்தில் ஐந்தடுக்கு மாடி கட்டடம் கட்டி, ஆலந்துார் மண்டல அலுவலகம், மாநகராட்சி தெற்கு மண்டல துணைக் கமிஷனர் அலுவலகம், பேரிடர் மீட்பு மைய அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 58 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
அந்த இடத்தை, கடந்த ஜூலை மாதம் மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பார்வையிட்டு, விரைவில் பணிகள் துவக்கப்படும் என தெரிவித்தார்.
தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான அன்பரசன் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. ஆனால், இன்றளவில் மண்டல அலுவலகம் கட்ட பூமி பூஜை கூட போடப்படவில்லை.
எனவே, ஆலந்துாரில் ஒதுக்கப்பட்ட இடத்தில் விரைவில் மண்டல அலுவலகம் கட்ட மாநகராட்சி கமிஷனர், மேயர் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரியுள்ளனர்.
- -நமது நிருபர்- -

