ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / சென்னை / யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி / யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி
/
சென்னை
யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி
ADDED : செப் 19, 2024 12:19 AM
வட சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்த காக்காதோப்பு பாலாஜி, ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர். சிறு வயதில் இருந்தே அடிதடி என, சிறிய வகை குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். பின், வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி நாகேந்திரன் தொடர்பால் கொலை, ஆள் கடத்தல், அடிதடிகளில் ஈடுபட்டு போலீசாரின் ரவுடி பட்டியலில் இடம் பெற்றார். தன்னை கண்டால் அனைவரும் பயப்பட வேண்டும் என, பாலாஜிக்கு ஆசை வந்துள்ளது. அப்போது, யுவராஜ், இன்பராஜ் என்ற ரவுடிகளுடன் சேர்ந்து, மாமூல் வசூலிக்க துவங்கினர். இவர்கள் மூவரும், சென்னை மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த ரவுடி ஒருவரின் அண்ணன் புஷ்பா என்பவரை கொலை செய்தனர். அதுதான், பாலாஜியின் முதல் கொலை.பின், தொழில் போட்டி காரணமாக, தன் கூட்டாளி யுவராஜையும் பாலாஜி கொலை செய்தார். சிறையில் இருந்த போது, ரவுடிகள் நடராஜன், மணல் மேடு சங்கரின் நட்பு கிடைத்தது. இவர்களின் ஆதரவுடன், மாமூல், கட்டப்பஞ்சாயத்து, மிரட்டி பணம் வசூலித்தல் போன்றவற்றில் அடாவடியாக இறங்கியுள்ளார். வட சென்னையைச் சேர்ந்த பில்லா ரமேஷ் என்பவரை, அவரது வீட்டின் கூரையை உடைத்து உள்ளே இறங்கி, அவரது மனைவி கண்முன், பாலாஜியும், அவரின் கூட்டாளிகளும் வெட்டி கொலை செய்தனர். அதே நாளில் ரவுடி விஜி என்பவரையும் பாலாஜி கொலை செய்தார். இந்த இரட்டை கொலைகள், வடசென்னை பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.இக்கொலைகளுக்கு பின்னர், ரவுடிகள் மத்தியிலும் பாலாஜி பெரிய தாதாவாக உருவெடுத்தார். அவருக்கென கும்பல் சேர்த்து, பழைய தொழில்களுடன், செம்மரக்கட்டை கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார்.பின், 2021ல், கஞ்சா வழக்கில் கைதாகி பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளி வந்த பின், ஆந்திராவில் பதுங்கி இருந்த பாலாஜி, அவ்வப்போது சென்னைக்கு வந்து, கஞ்சா, செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக, போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி திருவேங்கடம், ஜூலை 14ல் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரிடமும், நேற்று என்கவுன்டரில் கொல்லப்பட்ட ரவுடி காக்கா தோப்பு பாலாஜியிடமும், துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.திருவேங்கடம் போலீஸ் காவல் விசாரணையில் இருந்தபோதே கொல்லப்பட்டார். அப்போதே சர்ச்சை எழுந்தது. தற்போது, காக்கா தோப்பு பாலாஜி மீது புகார்கள் ஏதும் இல்லாத நிலையில், இவரை கஞ்சா வியாபாரியாக சித்தரிப்பதும், இவர் கொல்லப்பட்ட விதமும் சர்ச்சைகளை கிளப்பி உள்ளன.என்கவுன்டரை தவிர்த்து இருக்கலாமே என, வடக்கு மண்டல இணை கமிஷனர் பிரவேஷ்குமாரிடம் கேட்டபோது, ''சம்பவ இடத்தில் நடந்த சூழலுக்கு ஏற்ப, சட்ட ரீதியாக நடவடிக்கை கையாளப்பட்டது,'' என கூறினார். மேலும், பாலாஜி என்கவுன்டர் செய்யப்பட்ட விதம் குறித்து, மாஜிஸ்திரேட் விசாரணைக்கும் போலீஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும், வட சென்னையைச் சேர்ந்த ரவுடி 'சம்பவம்' செந்தில் பதுங்கி இருக்கும் இடத்தைகூட, தனிப்படை போலீசாரால் துப்பு துலக்க முடியவில்லை. ஆனால், சம்பவம் செந்திலின் பரம எதிரியாக விளங்கி வந்துள்ளார் காக்கா தோப்பு பாலாஜி. இதனால், சம்பவம் செந்திலையும் தீர்த்துக்கட்ட திட்டமிட்டார்.தன் உயிருக்கு குறி வைத்த தாடி சுரேஷ், பொக்கை ரவி, பாலாஜி உள்ளிட்டோரை தீர்த்துக்கட்ட, சம்பவம் செந்தில் 'ஸ்கெட்ச்' போட்டார். மற்ற இருவரையும் சம்பவம் செந்தில் தீர்த்துக்கட்ட, பாலாஜி மட்டும் உயிர் தப்பினார். கடந்த, 2020, மார்ச் 7ல், பாலாஜியும், தென் சென்னையைச் சேர்ந்த ரவுடி 'சிடி' மணியும், அண்ணா சாலையில் ஒரே காரில் சென்றனர். அப்போது, செந்தில் தன் கூட்டாளிகளை அவர்கள் மீது ஏவினார். தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே கார் மீது, செந்திலின் கூட்டாளிகள் வெடிகுண்டுகளை வீசி தீர்த்துக்கட்ட முயற்சித்தனர். ஆனால், பாலாஜியும், மணியும் சினிமா பாணியில் ரூட்டை மாற்றி உயிர் தப்பினர்.
தன் மகன் திருந்து வாழ்ந்து வந்த நிலையில், அவரை போலீசார் சுட்டுக் கொன்றதாக, காக்கா தோப்பு பாலாஜியின் தாய், கண்மணி, 65 குற்றம்சாட்டியுள்ளார்.அவர் கூறியதாவது:கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், சிறையில் நடந்த தகராறு தொடர்பாக 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, இரண்டு போலீஸ்காரர்கள் சாதாரண உடையில் வீட்டிற்கு வந்து விசாரித்து சென்றனர். ஜாமினில் இருந்த என் மகன், 10 நாட்களாக வேலுார் நீதிமன்றத்தில் கையெழுத்திடுவதற்காக சென்று வந்தார். வரும், 24ல் அந்த வழக்கில் இறுதி உத்தரவு வர உள்ளது. பத்து ஆண்டுகளாக எந்த தவறும் செய்யாமல் இருந்த என் மகனை, போலீசார் சுட்டு கொன்றுள்ளனர். உடல் உறுப்பு தானம் செய்துள்ளான் என் மகன். கடந்த மாதம்தான் அவனது பிறந்தநாள். அதை முன்னிட்டு பலருக்கு அன்னதானம் செய்துள்ளான்.இவ்வாறு கண்மணி கூறினார்.