ADDED : செப் 29, 2024 12:32 AM
ஊத்துக்கோட்டை, சென்னையின் நீராதாரங்களில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கமும் ஒன்று. இதன் கொள்ளளவு 3.23 டி.எம்.சி., நீர்மட்டம், 35 கன அடி.
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின்படி, தமிழகத்திற்கு கடந்த 19ம் தேதி காலை 11:00 மணிக்கு, வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கண்டலேறு அணையில் இருந்து, 152 கி.மீ., துாரமுள்ள சாய்கங்கா கால்வாய் வழியே, கடந்த 22ம் தேதி காலை 9:00 மணிக்கு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டிற்கு தண்ணீர் வந்தடைந்தது.
பின், அங்கிருந்து 25 கி.மீ., துாரமுள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு மறுநாள் காலை வந்தடைந்தது. இதனிடையே, கடந்த இரு நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. பூண்டி நீர்த்தேக்க நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக மழைநீர் வரத்து அதிகரித்தது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு, நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி இணைப்பு கால்வாய் வாயிலாக, வினாடிக்கு, 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.