/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விபத்தில் சிக்கிய ஓட்டுனர் உயிரிழப்பில் மர்மம் மனைவி புகார்; சக ஓட்டுனர்கள் போராட்டம்
/
விபத்தில் சிக்கிய ஓட்டுனர் உயிரிழப்பில் மர்மம் மனைவி புகார்; சக ஓட்டுனர்கள் போராட்டம்
விபத்தில் சிக்கிய ஓட்டுனர் உயிரிழப்பில் மர்மம் மனைவி புகார்; சக ஓட்டுனர்கள் போராட்டம்
விபத்தில் சிக்கிய ஓட்டுனர் உயிரிழப்பில் மர்மம் மனைவி புகார்; சக ஓட்டுனர்கள் போராட்டம்
ADDED : மே 18, 2025 03:43 AM

மணலிபுதுநகர்:ஆந்திர மாநிலம் சித்துாரில் நடந்த விபத்தில் காயமடைந்த லாரி ஓட்டுனர், மணலிபுதுநகர் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
துாத்துக்குடி மாவட்டம், குருமலை புதுாரைச் சேர்ந்தவர் ரவி செல்வம், 47; லாரி ஓட்டுனர். இவர், மணலிபுதுநகர், நேரு நகரில் உள்ள சி.ஏ., லாஜிஸ்டிக் நிறுவனத்தில், 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி, 42. தம்பதிக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த 14ம் தேதி, ஆந்திராவில் இருந்து நிறுவனத்திற்கு சொந்தமான கன்டெய்னர் லாரியில், 'மேங்கோ ஜூஸ்' லோடு ஏற்றிக் கொண்டு, ரவி செல்வம் ஓட்டி வந்தார். அதிகாலையில், சித்துார், மூங்கில் காடு எனும் பகுதியில், லாரி நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. விபத்தில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
அதே நிறுவனத்தைச் சேர்ந்த மற்றொரு லாரியை ஓட்டி வந்த, திண்டுக்கல்லைச் சேர்ந்த ரகுபதி, 35, என்பவர், ரவி செல்வத்தை மீட்டு, அங்கேயே மருத்துவமனை ஒன்றில், முதலுதவி சிகிச்சை அளித்த பின், நிறுவன அதிகாரிகள் அறிவுறுத்தல்படி, அவரை லாரியில் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.
அதன்படி, இரவு 10:30 மணிக்கு மேல், மணலிபுதுநகருக்கு வந்த நிலையில், அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மறுநாள் காலையில், அவர் அறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
தகவலறிந்த மணலிபுதுநகர் போலீசார், ரவி செல்வத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
இதற்கிடையில், நிறுவனத்தின் மெத்தனம் காரணமாக கணவர் உயிரிழந்தாகவும், சாவில் மர்மம் இருப்பதாகவும் கூறி, மனைவி ராஜேஸ்வரி மற்றும் ரவி செல்வத்துடன் பணியாற்றிய சக ஓட்டுனர்கள், 50க்கும் மேற்பட்டோர், நேற்று காலை நிறுவன வாயிலை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து, அங்கு வந்த மணலிபுதுநகர் போலீசார், புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.