ADDED : ஏப் 19, 2025 11:56 PM
சேத்துப்பட்டு, நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர் ராகுல், 26. இவர், சேத்துப்பட்டு, மங்களபுரம் பகுதியில் தங்கி, கறிக்கடையில் பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில், மனைவி அனிஷா, 25, உடன், 'பஜாஜ் பல்சர்' பைக்கில் கடைக்கு சென்றார். அப்போது, மதுபோதையில் இருந்த ராகுல், மேயர் ராமநாதன் சாலையில் வாகனத்தை வேகமாக ஓட்டியுள்ளார்.
ஒருகட்டத்தில் ராகுலின் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையில் விபத்திற்குள்ளானது. இதில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த அனிஷா, சம்பவ இடத்திலேயே பலியானார்.
கண், தலை மற்றும் முகத்தில் காயங்களுடன் ராகுல் உயிர் தப்பினார். பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அனிஷாவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காயமடைந்த ராகுல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.