/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சவுக்கு கட்டை, மணல் மூட்டைகளால் தடுப்புதாக்கு பிடிக்குமா? கடலுக்குள் போகுது எண்ணுார் விரைவு சாலை
/
சவுக்கு கட்டை, மணல் மூட்டைகளால் தடுப்புதாக்கு பிடிக்குமா? கடலுக்குள் போகுது எண்ணுார் விரைவு சாலை
சவுக்கு கட்டை, மணல் மூட்டைகளால் தடுப்புதாக்கு பிடிக்குமா? கடலுக்குள் போகுது எண்ணுார் விரைவு சாலை
சவுக்கு கட்டை, மணல் மூட்டைகளால் தடுப்புதாக்கு பிடிக்குமா? கடலுக்குள் போகுது எண்ணுார் விரைவு சாலை
ADDED : நவ 28, 2025 11:47 PM

திருவொற்றியூர்: கடல் சீற்றத்தால் சேதமாகும் தாழங்குப்பம் தார் சாலைக்கு மாற்றாக, கான்கிரீட் சாலை அமைப்பதில் சிக்கல் நீடிப்பதால், இரண்டாவது முறையாக மணல் மூட்டை அரண் அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிக தீர்வாக, அவ்வப்போது இதுபோல் மேற்கொள்ளப்படும் பணிக்கு, லட்சம் ரூபாய் செலவு செய்தாலும் பலத்த சூறை காற்றுக்கு தாக்கு பிடிக்குமா என்பது சந்தேகம் எழுந்துள்ளது. தவிர, கடல் அரிப்பால், எண்ணுார் விரைவு சாலையும் சரிந்து வருகிறது.
சென்னை, எண்ணுார், தாழங்குப்பம் கடற்கரையில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மீனவர்கள், தங்களது கட்டுமரம், பைபர் படகுகளை நிறுத்தி, ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல ஏதுவாக, 150 அடி துாரத்திற்கு பாறாங்கற்கள் அரண் இன்றி, இடைவெளி விடப்பட்டுள்ளது. சாதாரண நேரங்களில், இந்த இடை வெளி வழியாக, கடற்கரையை நோக்கி ஆர்ப்பரிக்கும் அலை, எண்ணுார் விரைவு சாலையின், தார் சாலையை பதம் பார்க்கும்.
புயல், சூறாவளி, காற்றழுத்த தாழ்வு நிலை போன்றவற்றால், கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டால், சீறி பாயும் அலைகளால், தார் சாலை சேதமாகும். பலத்த அலை வீசும் போதும், தார் சாலையின் அடிபாகம் முழுதும் பெயர்ந்து அப்படியே சரிந்து விழும்.
இதன் காரணமாக, தொடர் அதிகனமழை, பலத்த காற்று வீசினால், எண்ணுார் விரைவு சாலை பக்கம் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நிறுத்தப்படும். நிலைமை மோசமானால், அவ்வழியே போக்குவரத்து முற்றிலுமாக தடைபடும்.
தீர்வாக, அலை வந்து செல்லும், 150 அடி துாரத்திற்கு மட்டும், கான்கிரீட் சாலை அல்லது அரண் அமைத்துக் கொடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.
ஆனால், இச்சாலையை பராமரித்து வரும், நகர சாலைகள் பிரிவு அதிகாரிகள், கடந்த பருவமழையின் போது, தற்காலிக நடவடிக்கையாக, கடற்கரையில் இருந்த மணலை, சணல் கோணிகளில் நிரப்பி, பெயர்ந்த தார் சாலை மேலும் சேதமடையாதவாறு அரண் அமைத்தனர்.
ஆனால், தொடர் கடல் சீற்ற பாதிப்புகளால், மணல் மூட்டைகள் துவம்சமாகின. இந்நிலையில், இந்த பருவமழைக்காவது கான்கிரீட் சாலை அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 100க்கும் மேற்பட்ட மணல் மூட்டை, சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி, மீண்டும் அரண் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, நகர சாலைகள் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடற்கரையை ஒட்டிய பகுதி என்பதால், கான்கிரிட் சாலை அமைப்பதில் சிக்கல் உள்ளது. இதற்காக, கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம், அனுமதி பெற வேண்டியுள்ளது. விரைவில், அனுமதி பெற்று அப்பணிகள் துவங்கும்' என்றார்.

