/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செயலற்ற நீரூற்றுகள், மேம்பால சுவர்களில் கருகிய செடிகள் அழகுபடுத்த மீண்டும் ரூ.65 கோடி;வீணடிப்பு மாநகராட்சி?
/
செயலற்ற நீரூற்றுகள், மேம்பால சுவர்களில் கருகிய செடிகள் அழகுபடுத்த மீண்டும் ரூ.65 கோடி;வீணடிப்பு மாநகராட்சி?
செயலற்ற நீரூற்றுகள், மேம்பால சுவர்களில் கருகிய செடிகள் அழகுபடுத்த மீண்டும் ரூ.65 கோடி;வீணடிப்பு மாநகராட்சி?
செயலற்ற நீரூற்றுகள், மேம்பால சுவர்களில் கருகிய செடிகள் அழகுபடுத்த மீண்டும் ரூ.65 கோடி;வீணடிப்பு மாநகராட்சி?
ADDED : மார் 21, 2025 12:01 AM

'ஸ்மார்ட் சிட்டி திட்டம், சிங்கார சென்னை - 2.0' ஆகிய திட்டங்களில், சென்னை மாநகரை அழகுப்படுத்தும் பணிக்கு, பல கோடி ரூபாய் செலவிட்டும் தோல்வியடைந்த நிலையில், பட்ஜெட்டில் மீண்டும் 65 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதற்கு, சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகரை பசுமையாக்க, மாநகராட்சி சார்பில், பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, முக்கிய பாலங்களின் துாண்களில் அழகு செடிகளை வளர்க்கும், செங்குத்து பூங்கா அமைக்கப்பட்டது.
புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலம், எழும்பூர் பாந்தியன் சாலை மேம்பாலம், கோடம்பாக்கம், பெரம்பூர், தி.நகர், அமைந்தகரை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட மேம்பால துாண்களில், அழகிய செங்குத்து பூங்காக்கள் அமைக்கப்பட்டு, பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
மேலும், 25 இடங்களில் செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள் உள்ளிட்ட அழகுப்படுத்தும் பணிகள், 1.29 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்டன.
பிரதான சாலைகள், மைய தடுப்புகள் உள்ளிட்ட இடங்களில், பூச்செடிகள் நடப்பட்டன. தடுப்பு சுவர்களிலும், வண்ண ஓவியங்கள் வரைப்பட்டன. பல்வேறு வகையில், மாநகரை அழகுப்படுத்தும் பணி நடந்தது.
அதன்பின், செங்குத்து பூங்கா, சாலை மைய தடுப்பு பூச்செடிகள், நீரூற்றுகள் உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படவில்லை.
இதனால், அனைத்து பகுதிகளிலும், பூச்செடிகள் காய்ந்து கருகின. செயற்கை நீரூற்றுகள், தனியார் பராமரிப்பில் விடப்பட்டாலும், முறையாக பராமரிக்காமல், பாசிபடர்ந்து, கொசு உற்பத்திக்கு காரணமானது.
இத்திட்டம் தோல்வியடைந்ததாக அல்லது மாநகராட்சியால் முறையாக பராமரிக்கப்படாமல், மக்கள் பணம் வீணடிக்கப்பட்ட திட்டமாக மாறிவிட்டது.
இப்படி இருக்கையில், 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், சென்னை மாநகரை அழகுபடுத்த, 65 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக, மாநகராட்சி மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
* அதன்படி, சாலை மைய தடுப்புகள், தீவுத்திட்டுகளை அழகுபடுத்தி பராமரிக்க, 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது
* மாநகராட்சி நுழைவாயில்கள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் மின் ஒளியுடன் கூடிய செயற்கை நீரூற்றுகள், 5 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது
* மேம்பாலங்கள் மற்றும் ரயில்வே மேம்பாலங்களின் கீழ் அழகுப்படுத்தும் பணி, 42 கோடி ரூபாயில் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
இந்த ஆட்சியில், மாநகரை அழகுப்படுத்துகிறோம் என்ற பெயரில், பல கோடி ரூபாய் செலவிட்டு செய்த பணிகளை முறையாக பராமரித்து இருந்தால், மீண்டும் 65 கோடி நிதி ஒதுக்கீடு தேவையா என்ற கேள்வி எழுந்திருக்காது.
இந்த நிதியில் அழகுபடுத்தினாலும், அவற்றை யார் பராமரிப்பார்கள். மீண்டும் பூச்செடிகள் வெயிலில் காய்ந்து கருகாது; நீரூற்றுகளும் பாசி படராது என்பதற்கு என்ன உத்தரவாதம்.
எனவே, ஏற்கனவே அழகப்படுத்தப்பட்ட இடங்களை சீரமைத்து, முறையாக பராமரிப்பதை மாநகராட்சி உறுதிப்படுத்த வேண்டும். அதன்பின், மற்ற இடங்களில் விரிவுப்படுத்தட்டும். அதைவிர்த்து, மாநகராட்சி மக்களின் வரி பணத்தை வீண் விரயம் செய்ய வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
***
- நமது நிருபர் -