/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நெடுஞ்சாலை துறை கைவிட்ட விரிவாக்க பணிகள் தொடருமா?
/
நெடுஞ்சாலை துறை கைவிட்ட விரிவாக்க பணிகள் தொடருமா?
ADDED : ஜன 18, 2023 10:35 PM

மதுரவாயல், நெடுஞ்சாலை துறையால் பாதியில் கைவிடப்பட்ட, மதுரவாயல் ஆலப்பாக்கம் பிரதான சாலை விரிவாக்க பணியால், அச்சாலையில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
வளசரவாக்கம் - ஆற்காடு சாலை மற்றும் மதுரவாயல் -- பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக, ஆலப்பாக்கம் பிரதான சாலை உள்ளது.
ஆற்காடு சாலை முதல், மதுரவாயல் வரை, 2.9 கி.மீ., சாலை, தற்போது 20 முதல் 32 அடி அகலம் கொண்டதாக உள்ளது. இச்சாலையோரம் உள்ள, அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வணிக வளாகங்கள், கல்லுாரிகள் கட்டப்பட்டுள்ளன.
மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் வரும் இச்சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. ஆலப்பாக்கம் பிரதான சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற, நெடுஞ்சாலை துறை திட்டமிட்டு, அதற்கான முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, ஆற்காடு சாலையில் இருந்து, 600 மீ., துாரம், 82 அடி அகலத்திற்கு சாலையை விரிவாக்கம் செய்ய, 8.2 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்காக, 64 ஆயிரத்து 500 சதுரடி நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், 25 ஆயிரம் சதுரடி நிலம், அரசு நிலமாக இருந்தது.
இதையடுத்து, வருவாய் துறை சார்பில், நில அளவை செய்யப்பட்டு, 57 பேருக்கு 42 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.
இதில், 600 மீ., சாலை முழுமையாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள, 2.3 கி.மீ., சாலை விரிவாக்கம் செய்யப்படவில்லை.
மதுரவாயல் முதல் ஆற்காடு சாலை வரை, ஆலப்பாக்கம் சாலை வழியாக, மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. மெட்ரோ ரயில் நிர்வாகம், ஆலப்பாக்கம் பிரதான சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்திருந்தது.
இதன் காரணமாக, ஆலப்பாக்கம் பிரதான சாலை விரிவாக்கத்தை நெடுஞ்சாலைத் துறை கைவிட்டது. மதுரவாயல் - ஆற்காடு சாலை மெட்ரோ ரயில் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
தற்போது, வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதாலும், ஆலப்பாக்கம் பிரதான சாலையில் வரும் சேவை துறை பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக, ஆலப்பாக்கம் பிரதான சாலையில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.
வாகனங்கள் வரிசை கட்டி நின்று, ஆமை வேகத்தில் நகர்வதால் பள்ளி, கல்லுாரி மற்றும் அலுவலகம் செல்பவர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, கைவிடப்பட்ட ஆலப்பாக்கம் பிரதான சாலை விரிவாக்க பணிகளை, மாநில நெடுஞ்சாலை துறை மீண்டும் கையில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.