/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாயு கசிவு, விபத்துகளால் மருத்துவ தேவை அதிகரிப்பு திருவொற்றியூர் மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா?
/
வாயு கசிவு, விபத்துகளால் மருத்துவ தேவை அதிகரிப்பு திருவொற்றியூர் மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா?
வாயு கசிவு, விபத்துகளால் மருத்துவ தேவை அதிகரிப்பு திருவொற்றியூர் மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா?
வாயு கசிவு, விபத்துகளால் மருத்துவ தேவை அதிகரிப்பு திருவொற்றியூர் மருத்துவமனை தரம் உயர்த்தப்படுமா?
ADDED : நவ 12, 2025 12:35 AM

சென்னை: வாயு கசிவு, விபத்துகளால் மருத்துவ தேவை அதிகரித்துள்ளதால், திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையை, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், தரம் உயர்த்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே, திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தரை தளத்தில், புறநோயாளிகள் பிரிவு, முதியோர் அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை உள்ளன.
பிரசவம், ஹோமியோபதி பிரிவு, சளி பரிசோதனை, ஸ்கேன், ஈ.சி.ஜி., நுண் கதிர் பிரிவு, மருத்தகம், கட்டு கட்டும் பிரிவு, ஊசி போடுதல், மருத்துவ காப்பீடு வார்டு, குழந்தைகள் நலப்பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, அறுவை அரங்கம் உள்ளிட்ட சேவைகளும் இத்தளத்தில் உள்ளன.
தவிர, காது மூக்கு தொண்டை மற்றும் கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவும் செயல்படுகிறது. இங்கு தினசரி, 800 - 900க்கும் அதிகமான மருத்துவ பயனாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனை, மாலை 5:00 மணி வரை மட்டுமே செயல்படுகிறது.
இந்நிலையில், திருவொற்றியூர், எண்ணுார், மணலியை சுற்றி, டயர், கனரக வாகனங்கள், பெட்ரோலியம், ஆக்சிஜன், உரம் தயாரிப்பு உட்பட, 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
சி.எஸ்.ஆர்., நிதி? இவற்றால், அப்பகுதியில் திடீரென வெளியேறும் வாயு கசிவால், மக்கள் அதிகளவில் பாதிக்கும் சூழல் உள்ளது.
ஓராண்டிற்கு முன், எண்ணுார் உரத்தொழிற்சாலையில் இருந்து, அமோனியா வாயு கசிவின் போது, 50க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.
நள்ளிரவு நேரம் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாலும், அவசர மருத்துவ சேவை வேண்டி, அவர்கள் அனைவரும் திருவொற்றியூர் தனியார் மருத்துவமனைகளில் தான் அனுமதிக்கப்பட்டனர்.
அதே போல், எண்ணுார் விரைவு சாலை, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலை, மாதவரம் விரைவு சாலைகளில், கன்டெய்னர் உட்பட கனரக வாகன போக்குவரத்தால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதன் காரணமாக, படுகாயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை, ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், சில உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டு, பள்ளி மாணவியர் பாதிக்கப்பட்ட போதும், முதற்கட்ட சிகிச்சை இங்கு அளிக்கப்பட்டாலும், மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய சூழல் இருந்தது.
24 மணி நேரம் இதுபோல், மருத்துவ பேரிடர் காலங்களில், அவசர மருத்துவ தேவை இருக்கும் திருவொற்றியூர், மணலி, எண்ணுார் மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் நலன் வேண்டி, முதற்கட்டமாக திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனையை, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவிர, விபத்தில் சிக்குவோர் உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு, ஐ.சி.யு., எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவு இங்கு ஏற்படுத்த வேண்டும்.
நிரந்தர தீர்வாக, அனைத்து தொழிற்சாலைகளின் சி.எஸ்.ஆர்., எனும் சமூக மேம்பாட்டு நிதியை ஒருங்கிணைத்து, அதி நவீன வசதிகளுடன், அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் பெறும் வகையில், திருவொற்றியூர் அரசு பொது மருத்துவமனை தரம் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

