/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வில்லிவாக்கம் பஸ் நிலையம் 'கிளீன்'
/
வில்லிவாக்கம் பஸ் நிலையம் 'கிளீன்'
ADDED : ஜன 31, 2024 12:16 AM

வில்லிவாக்கம், நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள் பிடிக்கப்பட்டு, அப்பகுதி துாய்மை செய்யப்பட்டது. 'மாநகர கழகத்தின் ஒத்துழைப்பு இல்லாததால் சீர்கேடு தொடர்வதாக, மாநகராட்சி ஊழியர்கள் குற்றம்சாட்டினர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை மற்றும் பெரம்பூரில் உள்ள மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
அண்ணா நகர் மண்டலத்தில் தொடர்ந்து, மாடுகள் உலா வரும் நிலை அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் பலமுறை பிடித்து அபாரதம் விதித்தும், மாட்டின் உரிமையாளர்கள் மீண்டும் மீண்டும் அலட்சியமாக செயல்படுகின்றனர்.
குறிப்பாக, வில்லிவாக்கம் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் மாட்டு தொழுவமாக மாறி உள்ளன.
இதனால், சாணம் உள்ளிட்ட கழிவுகளால், அப்பகுதி துர்நாற்றம் வீசுகிறது. அதேபோல், பயணியரை அச்சுறுத்தும் வகையில் மட்டுமில்லாமல், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து மாடுகளை கட்டி வைத்தனர். மேலும், அவற்றுக்கு தீவனம் வைப்பது, பால் கறப்பது என அனைத்து வேலையும், போக்குவரத்திற்கு இடையூறாக நடந்தன.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் மாடுகளை பிடித்து, பெரம்பூருக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது:
வில்லிவாக்கம் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தி வருகிறோம்.
வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில், மாட்டின் உரிமையாளருக்கும், மாநகர கழகத்திற்கும் இடம் பிரச்னை உள்ளது.
இதுதொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் அதன் விபரங்களை தர மறுக்கின்றனர். இருவரும் பணியை செய்ய தடுக்கின்றனர்.
மாநகர பேருந்து கழகத்தின் ஒத்துழைப்பு இல்லாததால், மாடு உரிமையாளர்கள் அத்துமீறல் செய்கின்றனர். இதற்கு கழகமே முழு காரணம். எங்களுடன் ஒத்துழைத்தால், மாடுகள் திரிவதை தடுத்து, நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.