/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பித்தப்பை நீர் குழாயை வெட்டிய டாக்டர் பாதித்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
/
பித்தப்பை நீர் குழாயை வெட்டிய டாக்டர் பாதித்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
பித்தப்பை நீர் குழாயை வெட்டிய டாக்டர் பாதித்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
பித்தப்பை நீர் குழாயை வெட்டிய டாக்டர் பாதித்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
ADDED : செப் 02, 2025 01:53 AM
சென்னை;பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சையின்போது, பித்தப்பை நீர் குழாயை வெட்டியதால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை செய்த மருத்துவர், 10.25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்க பகுதியை சேர்ந்த சாந்தி பிரபுராம் தாக்கல் செய்த மனு:
வயிற்று வலிக்கு, நங்கநல்லுாரில் உள்ள டாக்டர் எஸ்.வெங்கட்ராமன் என்பவரிடம் சிகிச்சை பெற்றேன். கடந்த 2004 ஏப்., 19ல் அடிவயிற்றில் மீண்டும் கடும் வலி ஏற்பட்டது. 'ஸ்கேன்' பரிசோதனையில், தனக்கு பித்தப்பையில் கற்கள் உள்ளது கண்டறியப்பட்டது.
டாக்டர் அறிவுரைபடி, 2004 ஏப்., 21ல், லேப்ராஸ்கோபி முறையில், பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியதும், மீண்டும் வலி எடுத்தது. மஞ்சள் காமாலை நோயாலும் பாதிக்கப்பட்டேன்.
பின், தி.நகரில் உள்ள மற்றொரு டாக்டர் பரிந்துரைப்படி, வேலுார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்றேன். பரிசோதனையில், முதலில் சிகிச்சை அளித்த டாக்டர் எஸ்.வெங்கடராமன், பித்தப்பை நீர் குழாயின் ஒரு பகுதியை, அறுவை சிகிச்சையில் வெட்டியது தெரியவந்தது.
எனவே, கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர் வெங்கட்ராமன், இழப்பீடாக, 15 லட்சத்து, 51,100 ரூபாயும், மன உளைச்சல் மற்றும் மருத்துவ சேவை குறைபாடுக்கு, ஐந்து லட்சம் ரூபாயும் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் ஆர்.சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.சுரேஷ் ஆஜராகி, ''அறுவை சிகிச்சைக்குப்பின், மனுதாரரின் உடல் நிலை மிக மோசமானது. உணவு உட்கொள்ள முடியாமல், நகம், கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறி, வாந்தி எடுக்கும் நிலை உருவானது. பரிசோதனையில்தான், பித்தப்பை நீர் குழாய் வெட்டியது தெரியவந்தது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட ஆணைய தலைவர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் தரப்பு குற்றச்சாட்டை, டாக்டர் எஸ்.வெங்கட்ராமன் மறுத்துள்ளார். ஆனால், திசு நோயியல் அறிக்கையை, அவர் கருத்தில் கொள்ளாமல் சிகிச்சை அளித்ததால், புகார்தாரர் தேவையற்ற பல சிக்கல்களைச் சந்தித்துள்ளார். உடல், மன மற்றும் நிதி ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்ததும், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப அறிவுறுத்தி உள்ளார். அடுத்த பரிசோதனைக்கு எப்போது வர வேண்டும் என்பன போன்ற விபரங்களை தெரியப்படுத்தவில்லை.
எனவே, மருத்துவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக 25,000 ரூபாயும் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.